தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஆறு வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த கமல்ஹாசன், தற்போது 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதைக் கொண்டாடும் வகையில் 'உங்கள் நான்' எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், வடிவேலு, விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர்கள் ஏஸ்.ஏ.சந்திரசேகர், மணிரத்னம், ஷங்கர், என ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, திரை நட்சத்திரங்கள் கமல்ஹாசன் குறித்த பிரமிப்பையும், அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். மேலும், கமல்ஹாசனின் அரசியல் பற்றியும் அந்த மேடையில் பதிவு செய்தனர். ரஜினிகாந்த் பேசுகையில், கமல்ஹாசன் எனும் கலைஞன் அற்புதம் எனக் குறிப்பிட்டு தனக்கும் கமல்ஹாசனுக்கமான நட்பு உயிரோட்டமானது என்றார். மேலும் பேசிய அவர், “தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதைபோன்ற அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்றார்.
கமலும், நானும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இருவரின் சித்தாந்தங்களும், கொள்கைகளும் மாறினாலும் நட்பு மாறாது என்றும், அதனால் ரசிகர்களும் அந்த அன்பை கடைபிடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுகொண்டார்.
முன்னதாக பேசிய இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் தமிழகமும், தமிழ் மக்களும் பயன்பெறுவார்கள் என்றார். நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், மக்கள் நீதி மய்யம் எனும் பெயரே அவ்வளவு பிடித்தமானது எனவும், சினிமாவில் மக்களுக்கு நேர்மையாக நடந்துகொண்டதைப் போலவே, அரசியலிலும் கமல்ஹாசன் நடந்துகொள்வார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.