காந்தி சட்டையை கழற்றியதற்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கிறது என்ற வசனத்தை நடிகர் ரஜினி பேசியபோது, தான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
‘குண்டு’ திரைப்படம் தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.ரஞ்சித் " "படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும், நான் சந்தித்த ஆளுமைகள்தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். "சில்ட்ரென் ஆப் ஹெவன்" போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள்தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துக்கொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன்".
மேலும் பேசிய ரஞ்சித் " ரஜினி சாரை வைத்து படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. கபாலி படத்தில் "அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி சட்டையை கழற்றியதற்கும் பின்னாடி அரசியல் இருக்கு" என்று ரஜினி வசனம் பேசியபோது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன்.
"பரியேறும் பெருமாள்" படம் எடுக்கும்போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பிரஸுக்கு காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது. அந்தப்படம் தான் "குண்டு" படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது " என்றார் அவர்.