ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையானது சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த 14 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததாகவும் படக்குழு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினிகாந்திடம் திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன், நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், “ரஜினிகாந்தை பார்வையாளர்கள் சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும். அவருடைய மகள் அவரை கவனித்துக்கொள்கிறார். அவரது ரத்தம் அழுத்தம் சீராக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சைக்காக இன்றும் நாளையும் அவர் மருத்துவமனையில் இருப்பார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.