சினிமா

‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’ - தர்பார் ட்ரெய்லர் அலசல்..!

‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’ - தர்பார் ட்ரெய்லர் அலசல்..!

webteam

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியாகியது. படத்தின் ட்ரெய்லர் தொடங்கியது முதலே ரஜினியின் மாஸ் என்ட்ரியும், வசனங்களும் வலம் வரத் தொடங்குகின்றன. ரஜினியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் கவனத்துடன் ட்ரெய்லரை எடிட் செய்துள்ள, படக்குழு ‘நான் தாண்டா தர்பாரு’ பாடலுடன் ட்ரெய்லரை கொண்டு சென்றுள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரில் உள்ள தகவலின் படி, ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் ‘கெட்ட போலீஸாக ரஜினி வலம் வருகிறார்’. மும்பையின் புதிய ஆணையராக நியமிக்கப்படும் அவர், அங்கு அண்டர்வேர்ல்டு தாதாவாக இருக்கும் சுனில் ஷெட்டியின் ஆட்களுடன் மோதுகிறார். ரவுடிகளை கத்தியை வைத்து சரமாரியாக வெட்டும் காட்சிகளைக்கொண்டே, ரஜினி சட்டப்படி செயல்படும் கமிஷ்னர் இல்லை என்பது காட்டப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல, ‘போலீஸா சார் அவர் கொலைகாரன்’ என ஒரு வசனம் வருகிறது.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, ரவுடிகளுக்கு தண்ணி காட்டும் கமிஷ்னர் ரஜினிக்கு தான் யாரென்று காட்ட வேண்டும் என்பதில் சுனில் களமிறங்குகிறார். இதற்கிடையே நயன்தாராவை மருத்துவமனையில் சந்திக்கும் ரஜினி, முதல் சந்திப்பிலேயே வியந்து போகிறார். அடுத்தடுத்து அவர்களின் காதல் காட்சிகள் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஜாலியான சீன்கள் முடிவதற்குள், சுனில் ஷெட்டி நேரடியாக ரஜினியை அட்டாக் செய்கிறார். அடுத்த காட்சியில் ஐசியு-வில் எட்டிப் பார்த்து நயன்தாரா கலங்குவதிலேயே, உள்ளே இருப்பது ரஜினி என்பது உறுதியாகிறது. 

இதற்கிடையே ரயில்வே சண்டை, தூப்பாக்கிச்சூடுகள் என அடுத்த சீன்கள் விறுவிறுப்படைய, காயத்தில் இருந்து மீண்டு வரும் ரஜினி அடுத்தடுத்த மாஸ்களை காட்டுவார் என்பது வசனங்களிலேயே புரிகிறது. அத்துடன் ‘அவன்கிட்ட சொல்லுங்க.. போலீஸ் கிட்ட லெஃப்ட்ல வச்சுக்கோ, ரயிட்ல வச்சுக்கோ.. ஸ்ட்ரெய்ட்டா வச்சுக்க வேணாம்னு’ என ரஜினி கூறும் வசனத்தில், படம் முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டோரி தான் என்பதும், அரசியல் வசனங்கள் இருக்காது என்பதும் புரிகிறது. 

அடுத்த காட்சிகள் ரஜினியும் வில்லனும் நேரடியாக மோதிக்கொள்ளும் காட்சிகள் இருக்கின்றன. பின்னர் ஒரு போலீஸை பார்த்து ‘ஒரிஜினலாவே நான் வில்லன்ம்மா’ என ரஜினி கூறும் காட்சி, அந்த போலீஸ் வில்லனுடைய கையாள் என்பதை காட்டுகிறது. அனைத்து சீன்களிலுமே ரஜினி ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால், படம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.