நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் என்று அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் ரஜினி ரசிகர்மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் அவர் பேசும் போது, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின் போது தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அதிரடியாக பேசினார். போர் வரும் போது பார்த்து கொள்வோம், அது வரை பொறுமை காப்போம் என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற ரசிகர்கள் உடனான சந்திப்பில் அரசியல் குறித்து ரஜினி எதுவும் பேசவில்லை. அதேபோல், தொடர்ச்சியாக மவுனம் காத்து வருகிறார். இதனிடையே, அரசியலுக்கு வர வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று சமீபத்தில் ரஜினி கூறியிருந்தார். இதுவும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் என்று அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார். பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அது ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போய்விட்டதாக கூறப்படுகிறது.