நடக்க உள்ள 95வது ஆஸ்கர் விருதுகளில், RRR படத்தை இடம்பெறச் செய்ய தனிப்பட்ட முறையில் முயற்சிகளை செய்து வருகிறார் ராஜமௌலி. இரவின் நிழல் படத்தை இடம்பெறச் செய்ய பார்த்திபனும் முயன்று வருகிறார்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் `ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பி வைக்க விண்ணப்பித்திருந்தனர் படக்குழு. ஆனால் இந்திய தேர்வுக்குழு குஜராத்தி படமான `செலோ ஷோ’ படத்தையே இந்தியாவின் சார்பாக அனுப்பி வைத்தனர்.
இதனால் நடக்க இருக்கும் 95வது ஆஸ்கர் விருதுகளில், RRR படத்தை இடம்பெறச் செய்ய தனிப்பட்ட முறையில் முயற்சிகளை செய்து வருகிறார் ராஜமௌலி. அதற்கான For your consideration என்ற விளம்பரப் பிரச்சாரத்தையும் துவங்கியிருக்கிறார். இந்த பிரச்சாரம் என்பது படத்தை பலருக்கும் திரையிட்டுக் காட்டுவதில் துவங்கி பல விஷயங்களை உள்ளடக்கியது. படத்தை எந்த எந்த பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியுமோ அத்தனை விருதுகளுக்கும் விண்ணப்பித்திருக்கிறார்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ் என பதினைந்து பிரிவுகளின் கீழ் RRR படம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இதன் மூலம் RRR படத்திற்கு ஏதாவது விருது கிடைத்தால், இரண்டாவது முறையாக ஆஸ்கர் பெறும் ஆங்கில மொழி அல்லாத திரைப்படம் என்ற பெருமையைப் பெறும் RRR. இதற்கு முன் Bong Joon-ho இயக்கிய `பாரசைட்’ என்ற கொரிய மொழித் திரைப்படம் 2020ல் ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்றது. மேலும் ஆஸ்கர் போட்டியில் தனிப்பட்ட முறையில் பார்த்திபனும் தன்னுடைய இரவின் நிழல் படத்திற்காக விண்ணப்பித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
-ஜான்சன்