சினிமா

முகம் வீங்கிய விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரைசா நோட்டீஸ்!

முகம் வீங்கிய விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரைசா நோட்டீஸ்!

webteam

தோல்மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா வில்சன் குற்றம்சாட்டிய விவகாரத்தில், ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மருத்துவர் பைரவி செந்திலுக்கு ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  

1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொலிவு பெறாமல் ரத்தக்கசிவு , வீக்கம் ஏற்பட்டது எனக் கூறியுள்ள நிலையில், நஷ்ட ஈட்டை 15 நாளில் தராவிடில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நடிகை ரைசா வில்சனின் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார். 

முன்னதாக, விளம்பரத் துறையில் மாடலாக இருந்து, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு, “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்ததால், அடுத்தடுத்த வாய்ப்புகளும் ரைசாவிற்கு கிடைத்தன. அந்தவகையில், காதலிக்க யாருமில்லை, தி சேஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

திரைப்படத்தில் நடித்துக் கொண்டே மாடலிங் துறையிலும் பிசியாக வலம் வரும் ரைசா, தன் அழகை பராமரிப்பதிலும் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் பரமாரிப்பு மருத்துவமனையில், ஃபேசியல் செய்வதற்காக சென்றிருக்கிறார் ரைசா.

அங்கு, மருத்துவர் பைரவி செந்திலிடம், ஃபேசியல் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு வேண்டாத சில சிகிச்சைகளை அளித்ததால், தனது முகம் வீங்கியிருப்பதாகவும் புகைப்படத்துடன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், அந்த மருத்துவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, மருத்துவர் பைரவி தன்னிடம் பேச மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தோல்மருத்துவர் பைரவி செந்தில் அளித்த விளக்கம்

ரைசாவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மருத்துவர் பைரவி செந்தில், “ இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது. இதே, சிகிச்சையை ஏற்கெனவே ஒரு முறை ரைசா எடுத்துக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து தற்போது அதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் ” என்றார். இந்த நிலையில் தற்போது நடிகை ரைசா இவ்வாறான நோட்டீஸை விடுத்துள்ளார்.