சினிமா

'வாழ்க்கையை புரட்டிப்போட்ட கொரோனா'... - டாப்ஸி படத்தில் இருந்து விலகிய இயக்குநர்!

'வாழ்க்கையை புரட்டிப்போட்ட கொரோனா'... - டாப்ஸி படத்தில் இருந்து விலகிய இயக்குநர்!

நிவேதா ஜெகராஜா

நடிகை டாப்ஸி நடித்த கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து அதன் இயக்குநர் விலகியிருக்கிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை, மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த இந்திய வீராங்கனை, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். ஏற்கெனவே மேரி கோம், தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வெற்றியும் கண்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுப்பதாக அறிவிப்பு வெளியானது.

ராகுல் தொலாகியா இயக்க வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மித்தாலி தோற்றத்தில் நடிகை டாப்சி நடிக்கிறார். 'தனது வாழ்நாளில் கிரிக்கெட் விளையாடியதே இல்லை. மித்தாலி ராஜ் தோற்றத்தில் நடிப்பது பெரும் சவாலாது' என்று கூறிய டாப்ஸி கடுமையாக பயிற்சிகள் செய்து வந்தார். ஆர்வமுடன் கிரிக்கெட்டையும் கற்றுக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் கொரோனா காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது, படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ராகுல் தொலாகியா தற்போது விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக தேசிய விருது வென்ற இயக்குநரான ஸ்ரீஜித் முகர்ஜி டாப்ஸியை இயக்கவுள்ளார்.

படத்தில் இருந்து விலகியது தொடர்பாக ராகுல் தொலாகியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சினிமா வாழ்க்கையில் ஒரு இயக்குநருக்கு இயக்கியே ஆகவேண்டும் என்று சில திரைப்படங்கள் தோன்றும். அப்படி ஒரு கதையம்சம் கொண்டது 'சபாஷ் மிது' படம். இந்தப் படத்தின் கதையை படித்த உடனே எனக்கு பிடித்துவிட்டது. இதை இயக்கியே ஆகவேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் நான் நினைத்தது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு. கடந்த 2019ஆம் ஆண்டில் 'சபாஷ் மிது' பயணம் தொடங்கிய நிலையில் தற்போது அதனை முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இனி 'சபாஷ் மிது'வின் ஒரு பகுதியாக என்னால் தொடர முடியாது. அதேநேரம் படக்குழுவினர் 'சபாஷ் மிது' கனவை நிறைவேற்ற நான் உறுதுணையாக இருப்பேன். கொரோனா ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பணித்திட்டங்களையும் புரட்டி போட்டு இருக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கில்லாமல் சிக்கிக்கொண்டேன். படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.