மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து, மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கெனவே புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வந்தனர்.
அதன்படி, நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை ராதிகாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை தொடர்பாக நடிகை ராதிகா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதுகுறித்து அவர், "மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது, அங்கிருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து வீடியோவை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் அதுகுறித்து விசாரித்தேன்.அப்போதுதான் தெரியவந்தது, கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று. இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். இதுகுறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கேரவனில் கேமரா பொருத்தி இருப்பது பற்றி பேசியுள்ளது தொடர்பாக நடிகை ராதிகாவிடமும் நேரடியாக விசாரித்து கூடுதல் தகவல்கள் பெற சிறப்பு விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.