சினிமா

சொகுசு காரில் போக்குவரத்து விதியை மீறிய நடிகர் அல்லு அர்ஜுன் - அபராதம் விதித்த காவல்துறை

சொகுசு காரில் போக்குவரத்து விதியை மீறிய நடிகர் அல்லு அர்ஜுன் - அபராதம் விதித்த காவல்துறை

சங்கீதா

போக்குவரத்து விதியை மீறி சொகுசு காரில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டியிருந்ததால், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ‘ஆல வைகுந்தபுரம்லோ’, ‘புஷ்பா: தி ரைஸ்’ ஆகியப் படங்களின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமடைந்துள்ளார். இதனால் தென்னிந்தியாவைத் தாண்டியும், தற்போது இவருக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில், ஐதராபாத் சந்தை அருகே, ரேஞ்ச் ரோவர் சொகுசு காரின் கண்ணாடியில், உச்சநீதிமன்றத்தின் போக்குவரத்து விதியை மீறி, நடிகர் அல்லு அர்ஜுன் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டியிருந்ததால், 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், போக்குவரத்து காவல்துறையினர், அபராதத்திற்கான பற்றுச் சீட்டையும் அவரிடம் வழங்கினர். அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதத்திலேயே படப்பிடிப்பு துவங்க இருந்தநிலையில், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் ‘புஷ்பா: தி ரூல்’ படப்பிடிப்பு நடத்தி, டிசம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏனெனில்,  ‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன், வேணு ஸ்ரீராம், கொரட்டல சிவா, ஏ.ஆர். முருகதாஸ், பொயபட்டி ஸ்ரீனு மற்றும் பிரசாந்த் நீல் ஆகிய 5 இயக்குநர்களின் படங்களில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக, அல்லு அர்ஜுனை போன்று போக்குவரத்து விதியை மீறியதாக, திரி விக்ரம், ஜூனியர் என்.டி.ஆர், மனோஜ் மஞ்சு ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வெயிலிருந்து தற்காத்துக்கொள்ள கருப்புநிற ஃபிலிம், கார்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து, கடந்த 2012-ம் ஆண்டில், கருப்புநிற ஃபிலிம் ஒட்டப்பட்ட கார்களால், விபத்துகள் மற்றும் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புற கண்ணாடிகள் 70 சதவிகிதம், பக்கவாட்டு கண்ணாடிகள் 40 சதவிகிதம் வெளிப்படைத்தன்மை கொண்டிருத்தல் அவசியம் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து குறிப்பிட்ட சில அரசு உயர் பதவிகளை வகிப்பவர்களை தவிர, மற்றவர்கள் கார் கண்ணாடிகளில் கருப்புநிற ஃபிலிம் ஒட்ட அனுமதியில்லை. இந்த விதிகைளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.