சினிமா

கதை சர்ச்சையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம்

கதை சர்ச்சையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம்

jagadeesh


சர்க்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும் கதை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. ஒரு கதையை தன்னைப் போலவே இன்னொருவரும் யோசித்தார் என்பதற்காக, தாம் ஏன் இழப்பீடு வழங்க வேண்டும் என அத்திரைப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பரபரப்பு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்னை கத்தி, 96, சர்க்கார் படங்களின் வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஹீரோ படமும் கதை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படைப்பு, கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களின் கனவுகள், எப்படி சூரையாடப்படுகிறது என்றும், அவர்களை சூப்பர் ஹீரோவான கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இக்கதையின் கரு.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், போக்சோ பிரபு என்பவர் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஹீரோ படத்தின் கதை தன்னுடைய கதைக்கருவை ஒத்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அதுகுறித்து சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தலைமையிலான குழு இரு தரப்பில் விசாரணை மேற்கொண்டது. அதில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் கதையும், போக்சோ பிரபுவின் கதையும் ஒன்று தான் என அந்த குழு உறுதி செய்துள்ளது.

இயக்குநர் பாக்யராஜின் இம்முடிவை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ள இயக்குநர் மித்ரன், ஹீரோ கதை விவகாரத்தில் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தாங்கள் சமர்ப்பித்த திரைக்கதையை முழுமையாக படித்துப் பார்க்காமல், கதைச் சுருக்கத்தை மட்டுமே வைத்து இறுதி முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மித்ரனின் எதிர்வினையால், புகார்தாரரான போக்சோ பிரபுவை நீதிமன்றத்தை நாடச் சொல்லி தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது. கதை சர்ச்சை விவகாரத்தில் சங்க நடவடிக்கை மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்க தலைவர் கே.பாக்யராஜ் மறுத்துவிட்டார்.