‘தி ஃபேமிலி மேன் 2’ போன்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட உலகிற்கு ஈழத்தமிழ் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தைப் பார்த்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ’தி ஃபேமிலி மேன் 2’ தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று லண்டனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் முன்பு நேற்று போராட்டம் செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, ’தி ஃபேமிலி மேன் 2’ தொடரில் நடித்த தமிழ் நடிகர்கள் மற்றும் பங்களித்தவர்கள் குறித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அமைப்புகள் மொத்தமாக சேர்ந்து கடிதம் எழுதியுள்ளார்கள். அந்தக் கடிதத்தில்,
“இது போன்ற தொடர்கள் நம் தமிழக மண்ணில் நம்மோடு தாய் உறவுகளாக வாழும் எங்கள் சொந்தங்களையே பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. அதாவது இந்தத் தொடரில் நடித்தவர்கள், எழுதியவர்கள் என தமிழக மண்ணில் இருந்து சிலரால் இப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் அறியாமையாக விளக்கிட நினைத்தாலும் இவை எம் மனதை மிகவும் காயப்படுத்தி வலியை அதிகரிக்கிறது. எனவே வருங்காலத்தில் இது போல் ஒரு படைப்பில் நம் கலைஞர்களோ எழுத்தாளர்களோ இயக்குனர்களோ இணைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உலகம் முழுதும் வாழும் தமிழர் அமைப்புகள் மூலமாக இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.
'தி ஃபேமிலி மேன் 2' வலைத் தொடர் "ஒரு கற்பனையான படைப்பு" என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், 'ஈழத் தமிழர்கள்', 'பருத்தித்துறை', 'ஈழம்' மற்றும் 'வட இலங்கை' ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழம் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகின்றது.
ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது. மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டு சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
விடுதலைக்காக போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்" என்று கடிதம் எழுதியுள்ளனர்.