சினிமா

சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

sharpana

நடிகர் சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர், தாயார் மீது சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "நடிகர் சிம்புவால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளேன். ‘மாநாடு’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தடை போட்டிருப்பதாவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், மாமூல் கேட்பதாகவும் கந்துவட்டி கேட்பதாகவும் பல முறையற்ற குற்றச்சாட்டினை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோர் தெரிவித்திருப்பது பொய்பான குற்றசாட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர். “'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தங்களால் தீபாவளிக்கு 'மாநாடு' படம் வர இயலாது என்றும் அப்படி வெளியிடும் பட்சத்தில் விநியோகஸ்தர்களுக்கும். திரையரங்கு உரிமையர்ளகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும் என அறிக்கை மூலம் தெரிவித்து விட்டார். அப்படி இருக்கையில் இவர்கள் குற்றச்சாட்டு பொய்யானது. இந்தமாதிரியான தவறான தகவல்களை டி.ராஜேந்தர், உஷா தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் எடுத்த முடிவை மட்டுமே நிறைவேற்ற வலியுறுத்தினார்களே தவிர, வேறு எந்த கட்டபஞ்சாயத்தும் இரு சங்கங்களிலும் நடைபெறவில்லை. மேலும் இப்பொழுது இவர்கள் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. எனவே, இந்த பிரச்சினையில் காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு நல்லதொரு முடிவினை வழங்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடக்கத்திலிருந்தே பொய்யான உறுதியளித்து எனக்கு பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.