கங்குவா web
சினிமா

"1000 கோடி எல்லாம் குறைவு; 2000 கோடி வசூலை எதிர்பார்க்குறேன்" - கங்குவா வசூல் குறித்து தயாரிப்பாளர்!

கங்குவா திரைப்படத்தின் வசூல் குறித்து பேசியிருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆயிரம் கோடி வசூலை கடந்து 2000 கோடி வசூலை எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்ஆர்ஆர், ஜவான், பதான் என இந்திய சினிமாவில் மற்ற திரையுலகினர் 1000 கோடி வசூல் என்ற பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டிலும் சக்கப்போடு போட்ட நிலையில், 'தமிழ்சினிமா என்ன தான் பா பண்ணிட்டு இருக்கிங்க' என்ற குரல் பெரிதாக எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் “கங்குவா” திரைப்படம் இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பீரியட் திரைப்படமாக உருவாகியிருக்கும் கங்குவா..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் உருவாகியுள்ளது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா

படத்தின் கதையை பொறுத்தவரையில், 14 ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் 20 சதவீதம் வரலாற்றையும் 80 சதவீதம் கற்பனையும் அடிப்படையாக கொண்டு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலகட்ட நடைமுறைகளான இறைவழிபாடுகள், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கங்குவா என்பதற்கு நெருப்பில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம்.

கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

ஆயிரம் கோடிக்கு மேல வசூல்.. தயாரிப்பாளர் சொன்னது?

கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் நிலையில், புரமோசன் நிகழ்ச்சியில் படக்குழு கலந்துகொண்டு வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா ஒரு நேர்காணலில் கலந்துகொண்டனர். அதில் தயாரிப்பாளரிடம் கங்குவா படத்தின் வசூல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

கங்குவா படம் ஆயிரம் கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தயாரிப்பாளர், “படம் 500 கோடியை நெருங்கினாலும், 700 கோடியை நெருங்கினாலும் ஜிஎஸ்டி செல்லானை ஸ்டூடியோ கிரீன் அக்கவுண்ட்டில் ட்வீட் செய்ய சொல்லிவிடுகிறேன். அதிலிருந்து எல்லா தயாரிப்பாளர்களிடமும் ஜிஎஸ்டி செல்லானை கேட்டீங்கனா உண்மையான வசூல் என்ன என்பது தெரியவரும்” என்று கூறினார்.

மேலும் ”நான் 2000 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன். நீங்க என்னன்னா 1000 கோடினு குறைச்சு சொல்றீங்க” என்ற பதிலையும் ஞானவேல் ராஜா அளித்திருந்தார்.