இது குறித்து சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்... “மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது.
உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தை கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன, சமீபகால மீடியாக்களின் செயல். புகழ் பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்த உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்கிறது அல்லது வந்ததும் ஓட வைத்து விடுகிறது.
முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும், கூடாதென்று. இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிரழ்ந்து விட்டது ஊடகங்கள். சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலிச்சித்திரமா? பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் அறம் இல்லை. இவர்களால், தேவையற்ற கூட்டம் சேர்கிறது. முறையாக, அஞ்சலி செலுத்த வருபவர்களையும் வர முடியாமல் செய்கிறார்கள்.
இது கடுமையான மனச் சங்கடத்தைத் தருகிறது. இனி, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் காவல் துறையிடமும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமும் அனுமதி பெறாமல் காணொலிகளை எடுக்கக் கூடாது என கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.