திரையுலகினரின் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, அவரின் ஆதரவு
பெறப்படும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம், சங்க தலைவர் நடிகர் விஷால் தலைமையில் நடைபெற்றது. இதில்
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தயாரிப்பாளர் தானு, நடிகர் சிம்பு, மனோபாலா மற்றும் இயக்குநர்கள் விக்கிரமன், தங்கர்பச்சான்,
கேஎஸ் ரவிகுமார், சேரன், முருகதாஸ், பி.வாசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்தாலோசித்தனர். திரையரங்குகளில் நவீன சினிமா
திரையிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் தயாரிப்பாளர்கள் பாதிக்கபடுவதாக கூறி திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்தனை
தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சங்கங்களையும் ஒன்றிணைத்து
தயாரிப்பாளர்கள் பிரச்னை தொடர்பாக பேசி, திரைப்பட படப்பிடிப்பு பணிகளை புறக்கணித்து வருகிறோம். விரைவில் பிரச்சனைக்கு நல்ல
முடிவு எட்டப்படும். நடிகர் ரஜினிகாந்த் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என கூறியதற்கு, அவரிடம் நேரில் சென்று பிரச்னை
தொடர்பாக விளக்கமளித்து ஆதரவு கோருவோம். காலா படம் மட்டுமல்ல அனைத்து படங்களுமே விரைவில் திரையிட, நவீன சினிமா
பிரச்னையில் நல்ல முடிவு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.