சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி பொது முடக்கத்தை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ''நான் கேள்விப்பட்ட விஷயம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. என்ன குற்றம் செய்திருந்தாலும் எந்த ஒரு மனிதருக்கும் இப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது
இதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அந்தக் குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்