கொரோனா பேரிடரில் இந்தியாவுக்கு உதவும் விதமாக. தனது சொந்த முயற்சியில் 1.3 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருக்கிறார், நடிகர் பிரியங்கா சோப்ரா.
இந்தியாவில் கொரோனா பேரிடர் பாதிப்பிற்கு உதவும் விதமாக பாலிவுட் - ஹாலிவுட் நடிகர் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் இருவரும் இணைந்து 'டுகெதர் ஃபார் இந்தியா' என்ற நிதி திரட்டலைத் தொடங்கினர்.
இதைத் தொடங்கும்போது பேசிய பிரியங்கா சோப்ரா, "தொற்றுநோயைத் தொடர்ந்து மக்களிடையே பசி மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து போராட அனைவரும் பங்களிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்த முயற்சியின் மூலம் 1.3 மில்லியன் டாலர் நிதி திரட்டி இருப்பதாக பிரியங்கா சோப்ரா அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடும்போது, "கடந்த 2 மாதங்களில், உங்கள் பங்களிப்புகளுடன், நாங்கள் 1.3 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி திரட்டியுள்ளோம். இந்த நிதியை கொண்டு தேவையான சுகாதார வசதிகளை மேற்கொண்டதுடன், உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. இப்போது நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் இதனை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் இந்த முயற்சிக்கு முன்வந்து பங்களித்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி.
உங்களின் உதவிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் இந்த முயற்சியில் பங்கெடுத்தது. இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். திரட்டப்பட்ட நிதி மூலமாக உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநில மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், தேவைப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
மேலும் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்" என்று கூறியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.