சினிமா

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ஆன ’அந்தகன்’ படத்தில் பிரஷாந்த்துடன் இணைந்த பிரியா ஆனந்த்!

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ஆன ’அந்தகன்’ படத்தில் பிரஷாந்த்துடன் இணைந்த பிரியா ஆனந்த்!

sharpana

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகிறது. இந்தப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்காக ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது,

சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த், தபு கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது இன்னும் பலம். படத்தை, பிரஷாத்தின் அப்பா தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். ஏற்கனவே, கடந்த கிறிஸ்துமன் பண்டிகை அன்று பிரஷாந்த் பியானோ வாசிக்கும் வீடியோ வரவேற்பை பெற்று வைரலானது.

இந்நிலையில், அந்தாதூன் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பார்வையற்ற ஆயுஷ்மான் குரானாவின் காதலியாக நடிப்பில் உருக வைத்து கவனம் ஈர்த்தார் ராதிகா ஆப்தே.

தற்போது, அந்த கேரக்டரில் பிரியா ஆனந்த் நடிப்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. தற்போது ’அந்தகன்’ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் ஸ்கூட்டியில் பிரியா ஆனந்தும் பிரஷாந்தும் நிற்கும் புகைப்படம் செம்ம க்யூட் ஸ்டைலிஷ் ரகம். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.