கேப்டன் விஜயகாந்த்  புதிய தலைமுறை
சினிமா

“அண்ணன் விஜயகாந்த் பெயர் இல்லாம நடிகர் சங்க கட்டடம் இல்லை” - விஷால்

இன்று (9.1.2024) காலை 11 மணி அளவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கேயே அவருக்கு நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நடந்த அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நடிகர் விஷால் அச்சயமத்தில் கண்ணீரோடு காணொளி பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவரது உடலுக்கு நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதற்காக கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட நினைவிடத்திற்கு அவர்கள் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஷால், “கேப்டன் அரசியல் மற்றும் திரை உலகில் மிகப்பெரிய மனிதர். ஒருவர் மறைந்த பிறகுதான் அவரை கடவுள் என்று கூறுவார்கள். ஆனால் கேப்டன் உயிரோடு இருக்கும்போதே அவரை கடவுள் என்றுதான் அழைப்பார்கள். அவர் கட்சி அலுவலகத்தில் எப்போதும் 4 முதல் 6 பேர் கொண்ட சமையல் குழுவினர் சமைத்துக்கொண்டே இருப்பார்களாம். அங்கு சென்றவர்கள் யாரும் பசியோடு திரும்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, அவர்களை அழைத்து உணவு கொடுப்பது அவரின் வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

திரைத்துறை, பொதுப்பணித்துறை என்று அனைத்திலும் தலைசிறந்த மனிதர் அவர். அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். அந்த குற்றவுணர்ச்சி எனக்கு சாகும்வரை இருக்கும்.

ஒரு தொண்டனாக, ரசிகனாக அவரின் குடும்பதிற்கு கடமைபட்டுள்ளேன். கேப்டன் நம்முடன் இல்லை என்றாலும் என்றும் நம் மனதில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். மக்களின் மனதில் சமூக சேவையின் மூலம் அவர் இடம்பிடித்து விட்டார்.

மேலும் நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். அண்ணன் பெயர் இல்லாமல் இன்றைய நடிகர் சங்க கட்டடமே இல்லை. நடிகர் சங்கத்துக்காக அவரின் உழைப்பு சாதரணமானது அல்ல. நடிகர் சங்கம் சார்பில் வரும் 19 ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.