சினிமா

'தெலுங்கர்', 'கன்னடர்' பிரச்னையை கிளப்பிய நடிகர் சங்கம்... ஆவேசமடைந்த பிரகாஷ் ராஜ்!

'தெலுங்கர்', 'கன்னடர்' பிரச்னையை கிளப்பிய நடிகர் சங்கம்... ஆவேசமடைந்த பிரகாஷ் ராஜ்!

நிவேதா ஜெகராஜா

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம்வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், மொழிப் பின்புலம் சார்ந்த பிரச்னையில் தெலுங்கு திரையுலகிடம் சிக்கியிருப்பது 'ஹாட் டாபிக்' ஆக மாறியிருக்கிறது.

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பூர்விகம் கன்னடம் என்றாலும் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இதற்கிடையே, தெலுங்கு நடிகர்கள் சங்கமான `மா' (MAA - மூவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்) தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு போட்டிபோடுகின்றனர். மும்முனைப் போட்டி என்றாலும், பிரகாஷ்ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிடும் எதிரணியினர், `பிரகாஷ் ராஜ் கன்னடர். அவர் தெலுங்கர் கிடையாது. பிறப்பால் கன்னடரான அவரை தெலுங்கு நடிகர்கள் சங்கத் தலைவராக ஏற்பதா?" என்று மொழிப் பின்புலம் ரீதியாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா உலகிலும் தீயைப் பற்றவைத்துள்ளது. இது தொடர்பாக விவாதங்கள்தான் தற்போது அங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதேநேரத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான பாண்ட்லா கணேஷ், "பிரகாஷ் ராஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதாபிமானமும் கொண்டவர். இங்குள்ள மக்களுக்காக அவர் என்ன செய்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிவோம். பிரகாஷ் ராஜ் தெலுங்கர் அல்ல. கன்னடர் என்பது உண்மைதான். ஆனால் ஹைதரபாத் அருகே ஒரு கிராமத்தையே தத்தெடுத்து வளர்ச்சி பணிகள் ஆற்றி வருகிறார்.

அந்த அளவுக்கு தெலுங்கு மக்கள் மீது அன்பு செலுத்தி மக்களுக்காக சேவை செய்யும் அவரை தெலுங்கர், கன்னடர் என பிரித்து பேசுவது சரியா. மொழிகளை வைத்து கலைஞர்களை பிரித்து பேசுவது தவறான செயல். தெலுங்கு சினிமாவை உச்சத்தில் வைத்த பிரபாஸ், ராஜமவுலி போன்றோரும் வெளிமாநிலத்தவர்கள்தான். அவர்களை மற்ற மொழிக்காரர்கள் என பிரித்து பேசுவதை ஏற்றுக்கொள்வீர்களா?" என ஆதரவாக பேசியிருக்கிறார்.

அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜும், ``நான் தெலங்கானா மாநிலத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தபோது நான் கன்னடர் என்று யாரும் என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. நகரத்தில் எனது உதவியாளர்களுக்காக நான் வீடுகளை வாங்கினேன்; என் மகன் இந்த நகரத்தில் ஒரு பள்ளியில் படித்து வருகிறான். எனது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, நான் ஹைதராபாத்தில் வசிக்கும் உள்ளூர் நபர் என்று கூறுகிறது. 'அந்தப்புரம்' படத்தில் நடித்ததற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது.

இப்படி எல்லாவற்றிலும் நான் தெலுங்கர் அல்ல எனக் கேள்வி எழுப்பாமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் எழுப்புகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் முடிவு ஒரே இரவில் நடக்கவில்லை. ஒரு வருடம் நன்றாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். தெலுங்கு நடிகர்கள் அனைவரின் மேம்பாட்டிற்கும், செழிப்பிற்கும் பாடுபடவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.