சினிமா

’விஜய் 65’ படத்தை தொடர்ந்து பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்தில் இணைந்த பூவையார்!

’விஜய் 65’ படத்தை தொடர்ந்து பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்தில் இணைந்த பூவையார்!

sharpana

’அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ’அந்தகன்’ படத்தில் இணைந்துள்ளார் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பூவையார்.

மூன்று தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் பிரஷாந்த் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தபுவாக சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கிறார்கள். இப்படத்தை, பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜன் இயக்குகிறார்.

மேலும், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் நடித்துவரும் இப்படத்தில் சிறுவன் பூவையார் இணைந்திருக்கிறார். ’அந்தாதூன்’ படத்தில் எப்போதும் ஆயூஷ்மான் குரானாவை நோட்டமிடும் சிறுவன் கதாப்பாத்திரம்தான் திருப்புமுனையை ஏற்படுத்தும். தற்போது, பூவையார் அந்தகனில் இணைந்திருப்பதால், அந்த கதாப்பாத்திரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியில் கானா பாடல்களைப் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுவன் பூவையார் குழந்தையிலேயே தந்தையை இழந்தவர். கானா பாடல்கள் மூலம் வரும் வருமானத்தில்தான் தனது குடும்ப வறுமையை சமாளித்துக்கொண்டு தனது அம்மாவையும் கவனித்து வருகிறார். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி முடிந்தவுடனேயே விஜய்யின் ’பிகில்’ படத்தில் ’வெறித்தனம்’ பாடலுக்கு விஜய்யுடன் பாட வாய்ப்பு கொடுத்தார் ஏ.ஆர் ரஹ்மான். விஜய்யுடன் பாடியதோடு, அப்பாடலில் ஆடி குத்தாட்டம் போட்டு இன்னும் புகழ் பெற்றார் பூவையார்.

அதனைத்தொடர்ந்து, ’மாஸ்டர்’ படத்திலும் பூவையாருக்கு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாய்ப்பு கொடுத்தார் விஜய். அதில், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் சிறுவனாக நடித்து நெகிழ வைத்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து, ஹாட்ரிக்காக விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ’விஜய் 65’ படத்தில் பூவையார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.