pooja hegde - mamitha baiju  web
சினிமா

தளபதி 69 அப்டேட்: பீஸ்ட் படத்திற்கு பின் மீண்டும் பூஜா ஹெக்டே... உடன் கைக்கோர்த்த ‘பிரேமலு’ நடிகை!

Rishan Vengai

நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்கும் முன் 2 படங்களில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார். அதில் ஒருபடமான வெங்கட் பிரபு இயக்கத்திலான The GOAT (THE GREATEST OF ALL TIME), கடந்த செப் 5-ம் தேதி திரையரங்கில் வசூல்வேட்டை நடத்தியது. நாளை இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

GOAT VIJAY

GOAT படமானது நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, த்ரிஷா (கேமியோ), லைலா ஆகியோருடன் தோனி மற்றும் அஜித் ரெஃபரன்ஸுடன் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக விஜய்யை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

H Vinoth - Vijay

இந்நிலையில் விஜயின் சினிமா வாழ்க்கையின் கடைசி படமாக கூறப்படும் 69-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் புரொடக்ஷன் கம்பெனி செப்டம்பர் 14-ம் தேதி அறிவித்தது.

பாபி தியோலை தொடர்ந்து இணைந்த 2 நடிகைகள்! 

படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விஜயின் 69வது படமானது ஹெச் வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

அறிவிப்பு போஸ்டரில் “The torch bearer of Democracy" (ஜனநாயகத்தின் ஒளியை ஏந்துபவர்) என்ற டேக்லைன் இருந்ததால், விஜய் தன் கடைசி படத்தில் ஏதோ அரசியல் சம்பவம் இருப்பதாக ரசிகர்கள் டீகோட் செய்யத்தொடங்கினர்.

vijay 69

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் விஜய் 69 படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி அனிமல் படத்தின் வில்லனாக நடித்த பாபி தியோல் விஜய் 69 படத்தில் நடிக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு இன்று வெளியிடப்பட்ட முதல் அறிவிப்பில், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே மீண்டும் இணைந்து நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இன்றைய தினம் இரண்டாவது அறிவிப்பாக, பிரேமலு படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகையான மமிதா பைஜு இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் அவருக்கு இது நேரடி முதல் படமாக அமையவிருக்கிறது.