சினிமா

சமத்துவத்தை நோக்கி படையெடுக்கும் திரைப்படங்கள் : புது ட்ரெண்டாகும் தமிழ் சினிமா - பகுதி 1

சமத்துவத்தை நோக்கி படையெடுக்கும் திரைப்படங்கள் : புது ட்ரெண்டாகும் தமிழ் சினிமா - பகுதி 1

சங்கீதா

தமிழ் சினிமா நீண்ட காலமாக தமிழக மக்களிடையே வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்து வருகிறது. இதனால்தான் தமிழ் சினிமா எப்போதும், அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. இந்தநிலையில், தமிழ் சினிமா தற்போது எவ்வாறு சாதிகளுக்கு எதிரான சமத்துவத்தை பேசுகிறது என்பது பற்றிய சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

பல தசாப்தங்களாகவே, தமிழ் சினிமா எவ்வாறு அரசியலுடன் தொடர்பு கொண்டுள்ளது, துணை கதாபாத்திரங்களின் மோசமான சித்தரிப்பு மற்றும் பாலிவுட், தென்னிந்திய சினிமாவிற்கு இடையே உள்ள இடைவெளி ஆகியவைகள் குறித்து பற்றி ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனபடி, தமிழ் திரையுலகை சற்று உற்று நோக்கினால், 1950-களின் முற்பகுதியில், தமிழ் சினிமா, பக்தி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை, கருப்பொருளாகக் கொண்ட கதையை சுற்றியே நகர்ந்தது. ஏனெனில், அக்கால கட்டத்தில், இந்த விஷயங்கள் பெரிதாக காணப்பட்டது. அதன்பின்னர் வந்த மாபெரும் அரசியல் தலைவர்களான சி.என். அண்ணாதுரை, எம். கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோர், தங்களது அரசியல் கருத்துக்களைப் பரப்புவதற்கு, திரையுலகை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தினர். குறிப்பாக, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குறைகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம், தங்களது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தவும் செய்தனர்.

தமிழ் சினிமாவை அதன் பரிணாம வளர்ச்சியிலிருந்து ஒரு கலையாக மட்டும் பார்க்காமல், அரசியல் சார்ந்த வகையாகவும் நாம் பார்த்தால், 1960 மற்றும் 70-களில், தமிழ் சினிமாவின் அரசியலை, திராவிடக்காலம் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், முக்கியமாக திராவிட இயக்கங்கள் சினிமாவை ஒரு இன்றியமையாத பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தியது. இதில் அரசியல் அதிகாரம், சுயமரியாதை மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை கொண்ட வெளிப்படையான அரசியல் செய்திகளைக் கொண்ட திரைப்படங்கள் வந்தன.

இருப்பினும், 1980-களில் இருந்து, தமிழ் திரையுலம் வேறு களத்திற்கு மாறியது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் நிலவி வந்த தீவிரமான சாதி அடிப்படையிலான வன்முறைகளைக் கொண்ட படங்களாக தமிழ் சினிமாவில் வெளிவந்தது. இந்த சாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள், சினிமாவில் தீவிரமாக பிரதிபலித்தது. சொல்லப்போனால், 1980 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில், தமிழ் சினிமாவில் சாதி சார்ந்த கதாபாத்திரங்கள் மற்றும் சாதி அடையாளம் சார்ந்த படங்கள் அதிகளவில் வெளிவர துவங்கின.

குறிப்பாக மதுரையை மையமாகக் கொண்டு கொலை, கலவரம் ஆகிய கதையம்சங்கள் நிறைந்த படங்களே வெளிவந்தன. பெரும்பாலும் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படங்கள், வன்முறையும், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த நபர், சமூகத்தின் மரியாதையைக் காப்பாற்றக்கூடிய மனிதனாக, படத்தின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. இதன் முக்கிய படங்களாக நாம் குறிப்பிட வேண்டுமென்றால், கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ (1992), பாராதிராஜாவின் ‘பசும்பொன்’ (1995), ‘தாஜ்மஹால்’ (1999), பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ (2004), தரணியின் ‘கில்லி’ (2004), அமீரின் ‘பருத்தி வீரன்’ (2007), சசிகுமாரின் ‘சுப்பிரமணியபுரம்’ (2008) ஆகிய படங்களை குறிப்பிடலாம்.

இந்தப் படங்களில் பெரும்பாலானவை, மதுரை மாவட்டத்தை சாதி வன்முறையின் மையமாக குறிப்பிடுவது, ஆண் அல்லது சாதி மரியாதையை பழிவாங்குவது, மேலும் பல கொடுமைகள் மற்றும் வன்முறைகளை சித்தரிக்கும் விதமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டு, அதனை ஹீரோ வெற்றிக்கொள்ளும் விதமாகவே பின்பற்றப்பட்டு வந்தது. பட்டியலினத்தவர் சினிமா பற்றி, சூரஜ் யெங்டே என்ற ஆராய்ச்சியாளர் தனது கட்டுரையில் குறிப்பிடுகையில், "இந்திய திரைப்படத் துறையானது சாதி சார்ந்ததாகவும், பாரபட்சம் நிறைந்ததாகவும் படைப்புகள் உருவாக்கப்பட்டது. இந்தப் படங்களில் எல்லாம் பட்டியலினத்தவர் பற்றி எடுக்கப்படும்போது, ஒரு தார்மீக அக்கறையுடன் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலம் வரை தமிழ் சினிமாவிலும் அதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது. 2010-களின் முற்பகுதி வரை நிறைய தமிழ் படங்கள் பட்டியலினத்தவர் கதாபாத்திரங்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும், சுரண்டப்பட்டவர்களாகவும், எப்போதும் உதவி தேவைப்படும்வர்களாகவும் சித்தரித்தே வந்தன. இந்தத்திரைப்படங்கள் பெரும்பாலும், ஒதுக்கப்பட்டவர்களை தேவையற்றவர்களாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவிக்கும் ஒரு மீட்பர் வருவதற்காகக் காத்திருப்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டது.

பட்டியலினத்தவர் குணாதிசயங்களை தனித்து காண்பித்தது என்றால் அது பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ (2014) திரைப்படம் . ஏனெனில் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு புதிய வகையான ட்ரெண்ட்டை உருவாக்கியது. பட்டியலினத்தவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்வது போன்றும், காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் திரைப்படம் சாதிக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்கம் பற்றியும் மற்றும் கீழ்த்தரமான உரையாடலில் இருந்து மாறுபட்டு இருந்தது. பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அமீர் மற்றும் கோபி நயினார் போன்ற இயக்குநர்கள், பட்டியலினத்தவர் கதாபாத்திரங்களை கடந்த 2014-ம் ஆண்டு முதல் பட்டியலினத்தைவர்களை மனிதநேயமிக்கவர்களாக காட்டும் வகையில், பல திரைப்படங்களை கொண்டு வந்தனர். இதுபற்றி அடுத்தப் பதிவில் முழுமையாக நாம் காணலாம்.

- சங்கீதா