‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சர்காரின் பாடல் வெளியீட்டிலிருந்து அத்திரைப்படம் சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் பேசுபொருளாகவே உள்ளது. பாடல் வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ‘மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது’ என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார்.
இந்நிலையில் பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் "கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் 'சர்கார்' பட விஜய்யின் கதாப்பாத்திரத்திற்கான இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் எனக் கூறியிருந்தார். இந்தப் பேட்டிக்கு பின்பு 'சர்கார்' மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு ஏற்றார்போலவே டீசரில் அரசியல் வசனங்கள் பட்டையைக்கிளப்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கதையை திருடி 'சர்கார்' என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று முறையிடப்பட்டுள்ளதால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும், வழக்கை விசாரிக்க நீதிபதி எம்.சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.