சினிமா

விஜய்சேதுபதி கருத்தை ஆதரித்து பி.சி.ஸ்ரீராம் ட்வீட்

விஜய்சேதுபதி கருத்தை ஆதரித்து பி.சி.ஸ்ரீராம் ட்வீட்

webteam

விஜய்சேதுபதி ட்வீட் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் உள்ளிட்ட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்‌. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தன. அதன்படி விஜய்க்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தின் பெண் உரிமையாளர் ஒருவர் இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார் எனவும் இதில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது எனவும் வதந்தி பரவியது.

மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட சில பிரபலங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த மதமாற்ற புகாரினால்தான் விஜய் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இதுகுறித்த செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய்சேதுபதி ட்வீட் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்,“நீங்கள் சொன்னீர்கள், சரியாகச் சொன்னீர்கள்”என்று கூறியுள்ளார்.