பத்து தல, விடுதலை-1  twitter pages
சினிமா

சிம்புவின் ‘பத்து தல’, வெற்றிமாறனின் ‘விடுதலை-1’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

‘பத்து தல’ படத்தின் 4 நாட்கள் வசூல் நிலவரமும், ‘விடுதலை-1’ படத்தின் 3 நாட்கள் வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது.

Sangeetha R
‘பத்து தல’

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிம்பு,

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், 4 நாட்களில் 26.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 22.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், 2023-ம் ஆண்டில் தமிழ் திரையுலகிலிருந்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் மட்டும் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’, தனுஷின் ‘வாத்தி’ படத்தை அடுத்து 4-வது இடத்தில் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டு திரையரங்குகளில் முதல் நாள் வசூலில் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் (ரூ. 6.25 கோடி), தனுஷின் ‘வாத்தி’ படத்தை (ரூ. 5.4 கோடி) முந்தினாலும், உலக அளவில் முதல் நாள் வசூலில் ரூ. 8 கோடியே வசூலித்து பின்தங்கியுள்ளது. ஆனால், தனுஷின் ‘வாத்தி’ படம், முதல் நாளில் மட்டும் 14.85 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.

‘விடுதலை-1’

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், ‘விடுதலை-1’. சூரி முதன்மை கதாபாத்திரத்தில் காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை 3 நாட்களில் 17.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் இந்த வருடம் வெளியானப் படங்களில் முதல் நாளில் மட்டும் 4.5 கோடி ரூபாய் வசூலித்து 5-ம் இடத்தில் உள்ளது.

சூரி, விஜய் சேதுபதி, வெற்றி மாறன்,

‘பத்து தல’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 500 ஸ்கிரீன்களிலும், ‘விடுதலை-1’ திரைப்படம் 400 ஸ்கிரீன்களிலும் வெளியானதாகக் கூறப்படுகிறது. வார விடுமுறை நாட்கள் முடிந்துள்ளதாலும், ஐபிஎல் போட்டிகள் மற்றும் பொதுத் தேர்வு காரணமாக இரண்டு படங்களின் வசூலிலும் மந்தம் ஏற்படுமா, இல்லை வசூல் வேட்டை நடத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.