சினிமா

முத்தழகின் வாழ்க்கை பருத்திவீரனால் காவு வாங்கப்பட்டதா? என்ன சொல்கிறது படம்? - ஓர் அலசல்!

முத்தழகின் வாழ்க்கை பருத்திவீரனால் காவு வாங்கப்பட்டதா? என்ன சொல்கிறது படம்? - ஓர் அலசல்!

rajakannan

சினிமா என்பது மனிதர்களுடைய எண்ணங்களை, கனவுகளை ஒரு கலைப் படைப்பாக உருவாக்குவது மட்டுமல்ல. அது, சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்கவும், மனிதர்களின் சிந்தனையை வளர்க்கவும் செய்யும். அந்த அளவிற்கு நவீன காலத்தில் மற்ற எல்லா கலைகளை காட்டிலும் சினிமாவின் தாக்கம் அதிக அளவில் சமுதாயத்தில் இருந்து வருகிறது.

ஆனால், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்ற அளவிலேயே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஒரு திரைப்படம் குறித்த விமர்சனங்கள் எழும்போது ’ஏன் ஒரு பொழுதுபோக்கு சினிமாவுக்கு இப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள்?’ என்று பலரும் கூறுகிறார்கள். அது அப்படி அல்ல. கலை வடிவங்களே ஒரு மனிதனுக்கு அவனை தாண்டிய உலகின் பரந்த பார்வையை எடுத்துக்காட்டுகிறது. பரந்து விரிந்த இந்த உலகமானது ஒரு மனிதனுக்கு சினிமா போன்ற கலைப்படைப்புகளின் வழியேதான் பெரும்பாலும் அறிமுகம் ஆகிறது. அதனால், ஒரு சினிமா என்பதை வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் என்று புறந்தள்ளி விட முடியாது.

இந்த கட்டுரையில் நாம் பருத்திவீரன் படம் குறித்துதான் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பென்ச் மார்க் திரைப்படமாக பருத்திவீரன் திகழ்கிறது. பருத்திவீரன் வெளியான பிறகு அந்த படத்தின் தாக்கத்தில் சாயலில் இதுவரை நூற்றுக்கணக்கான படம் தமிழ் சினிமாவில் வந்துவிட்டது. ஆனால், இதுவரை பருத்திவீரன் போன்ற ஒரு க்ளாசிக்கான படத்தை இன்னொருவரால் உருவாக்கவே முடியவில்லை.

சரி, பருத்திவீரன் ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் காணவேண்டிய படம் தானே; இதில் ஆய்வு செய்யும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள்? நிச்சயம் இல்லை. பருத்திவீரன் படம் குறித்த விரிவான ஒரு ஆய்வு நிச்சயம் தேவைப்படுகிறது. ஏனெனில், பருத்திவீரனில் இருந்து எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்களும் இருக்கின்றது. அதேபோல், ஒரு மோசமான தவறான முன்னுதாரணமாகவும் இந்தப் படம் அமைந்துவிட்டது என்பதும் மறுக்க இயலாத உண்மையாக உள்ளது. அப்படி என்ன மோசமான அம்சத்தை பருத்திவீரன் கொண்டுள்ளது என உங்களுக்கு திகைப்பாகக் கூட இருக்கலாம். வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

பருத்திவீரனில் எதுதான் பிரச்னை!

ஒரு திரைப்படம் என்பதை என்ன நோக்கத்துடன் ஒரு இயக்குநர் எடுக்கிறார் என்பதைக் காட்டிலும் அந்த திரைப்படம் என்ன தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது என்பது முக்கியமானதாகும். அந்த தாக்கத்திற்கு இயக்குநரே முழு முதல் பொறுப்பாகும். பருத்திவீரன் படத்தை இயக்குநர் அமீர் ஒரு நல்ல நோக்கத்துடன் தான் எடுத்திருக்கிறார் என்பது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருத்திவீரன் படம் எடுத்துக் கொள்ளப்பட்ட விதமும், அதனால் ஏற்பட்ட தாக்கமும் நிச்சயம் அவர் நினைத்ததுபோல இருந்திருக்காது. இந்தப் பிரச்னை தேவர் மகன் திரைப்படத்திற்கும் உண்டு. அதேபோல், மதயானைக் கூட்டம் திரைப்படத்திற்கும் பொருந்தும். இந்த மூன்று படங்களின் இயக்குநர்களும் கதையை உருவாக்கியவர்களின் நோக்கமும் சிறந்ததே. ஆனால், அந்த படைப்புகளின் தாக்கம் என்னவாக சமுதாயத்தில் பிரதிபலித்தது.

பருத்திவீரன் கதைப்படி, பருத்திவீரன் வாழ்வில் அவன் செய்த தீமைகள் அனைத்தும் முத்தழகின் வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது என்பதுதான் மையக்கரு. அதேபோல், பருத்திவீரன் வாழ்க்கை சீரழிந்ததற்கு காரணம் இந்த தமிழ் சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிய கட்டுமானம்தான். கழுவத் தேவன் கதாபாத்திரத்தின் சாதிய வெறியே பருத்திவீரன் வாழ்க்கையை அழித்தது. இத்தனைக்கும் பருத்திவீரன் அவருடைய மனைவியின் சகோதரனின் மகன் தான். தங்களைவிட தாழ்ந்ததாக கருதப்படும் ஒரு சமுதாயத்தில் பெண்ணை கட்டிவிட்டார் என்பதற்காகவே பருத்திவீரனின் தந்தையான மருதுவையும் தாயையும் வீட்டைவிட்டே வெளியேற்றி ஒதுக்கி வைத்தான் கழுவன்.

அதேபோல், தாய், தந்தையை இழந்துவிட்ட பின்னர் அனாதையாக நின்ற பருத்திவீரனை கழுவன் வீட்டைவிட்டு வெளியேற்றினான். சாதிய சமுதாயத்தின் தாக்கம், அதாவது பருத்திவீரனை படிக்காமல் செய்தது. அவனது பிறப்பை மனதில் வைத்து வாத்தியார் அடித்தார் என்று செவ்வாழை கதாபாத்திரம் தெளிவாக சொல்லும். சாதிய கட்டுமானத்திற்கு எதிரான மிக காட்டமான படமாகவே அமீர் எடுக்க நினைத்திருக்கக் கூடும். ஆனால், உண்மையில் இந்த கருத்தாக்கங்கள் மக்கள் மனதில் பதிந்ததா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால், பருத்திவீரன் படம் புரிந்து கொள்ளப்பட்ட விதம் நிச்சயமாக அப்படி இல்லை.

பருத்திவீரன் படத்தின் சிக்கலை புரிந்துகொள்வதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் சாதிய சமுதாயங்களின் வாழ்வியல் எப்படி காலந்தோறும் பிரதிபலித்து வந்துள்ளது என்பதையும், பாரதிராஜாவின் காலம், தேவர் மகன் படம் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ளும் போதுதான் பருத்திவீரன் திரைப்படமும் அதனையொட்டி வந்த மதயானைக் கூட்டம் போன்ற படங்களும் ஏற்படுத்திய தாக்கத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். புரிதல் மிக முக்கியம் என்பதால் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

கால மாற்றமும் சினிமாவின் மாற்றமும்

தமிழக வரலாற்றில் மிக முக்கியமான போர்குடி சமுதாயத்தின் வாழ்வியலை மிக துல்லியமாக, மிக நெருக்கமாக காட்சிப்படுத்திய திரைப்படம் பருத்திவீரன். முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரது வாழ்வியலை முன்னிருத்தி 1980களுக்கு பிறகு குறிப்பாக 1990களுக்கு பிறகு நூற்றுக்கணக்கான படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக பார்த்தால் அவர்களது வாழ்வியலை மட்டும் முன்னிறுத்திய படங்களை காண முடியாது.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலங்களிலும் சரி, அவர்களுக்கு முந்தைய காலங்களிலும் சரி. அதிகமாக அடிபடும் பெயர்கள் ஐயர்வாள், பிள்ளைவாள், நாயுடு போன்றவைதான். அங்கு மாயாண்டிகளும், கபாலிகளும் அடியாட்களாகவே இருந்தார்கள். பண்ணையார்களின் சினிமாக்கள் அப்பொழுது வந்தது. இது சினிமாவில் மட்டுமல்ல; நாடகம் உள்ளிட்ட எல்லா கலைத்துறைகளிலும் இதனை பார்க்க முடியும். அதாவது, சமுதாயத்தில் எந்தவிதமாக சூழல் நிலவுகிறதோ அதே சூழல்தான் சினிமாவிலும் இருக்கும். சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றம் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமானது அடுத்த தலைமுறைகளை சினிமா துறைக்குள் கொண்டு வந்தது. அந்த வகையில் 80களில் மிகப்பெரிய இயக்குநர் ஆளுமையாக வந்தவர்தான் பாரதிராஜா.

பாரதிராஜாவின் காலம்

முக்குலத்தோர், குறிப்பாக கள்ளர் சமுதாய மக்களின் வாழ்வியலை சினிமாவின் அதிகம் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் பாரதிராஜா. மண்வாசனை, கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவருடைய சமுதாயத்தின் வாழ்வியலை பேசியிருப்பார். அது அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் திரைவடிவில் இருந்தது. ஆனாலும், பாரதிராஜா கோலோச்ச தொடங்கிய 80களின் காலத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாரதிராஜாவின் காலத்தில் மணிவண்ணன் போன்றவர்கள் அவருடன் இருந்தார்கள். அந்த காலமுமே ஒரு விதமான புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை கொண்ட படங்கள் வெளிவந்தன. மலையூர் மம்மட்டியான், கரிமேடு கருவாயன் போன்ற பண்ணையார் அடிமைத்தனத்திற்கு எதிரான படங்கள் வந்தன.

அதனால், அந்த காலத்தில் வந்த பாரதிராஜாவின் படங்களில் பெண்கள் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, வேலையில்லாத திண்டாட்டம், மூடநம்பிக்கை போன்ற கருத்துக்களை தாங்கி நின்றன. அதேபோல், மண்வாசனை போன்ற படத்தையும் பாரதிராஜா எடுத்தார். இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இரண்டுவிதமான அம்சங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்று அந்த கலைப்படைப்பை உருவாக்குகின்ற இயக்குநரின் வாழ்வியல். மற்றொன்று அவர் வாழ்ந்த காலத்தில் தாக்கம் செலுத்திய கருத்தாக்கம். அதனால், தன்னுடைய வாழ்வியலின் தாக்கும் பாரதிராஜாவின் படங்களில் இருக்கும். அதேபோல் அன்றைய காலகட்டத்தின் கருத்துக்களின் தாக்கமும் இருக்கும். 

அந்த வகையில் தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கம்

கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுதான் தேவர் மகன். தேவர் மகன் படம் இல்லையென்றால் நிச்சயம் பருத்திவீரன் இல்லை என்றே சொல்லலாம். தேவர் மகன் படத்திற்கு பிறகு முக்குலத்தோர் சமுதாயத்திலிருந்து கமல்ஹாசனுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை பருத்திவீரன் படத்தின் முதல் திருவிழா காட்சிகளிலேயே பார்க்கலாம். சரி, தேவர் மகன் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்க்கலாம். பரதன் இயக்கி இருந்தாலும் தேவர் மகன் முழுக்க முழுக்க கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம். திரைமொழியில் மிக அட்டகாசமான உச்சத்தை தொட்ட படம்.

கதையின் தொடக்கத்தில் சக்திவேலாக வரும் கமல்ஹாசன் படத்தின் முடிவில் சக்திவேல் தேவராக மாறிவிடுவார். தேவர் மகன் என்ற பெயரில் நிச்சயமாக பிரச்னை இல்லை. வெறும் பெயரினால் பெரிய தாக்கம் ஏற்பட்டு விடாது. ஒரு கதையை எந்த விதத்தில் அணுகுகிறோம். தான் பிறந்த மண்ணிற்கு எதாவது செய்ய வேண்டும்; அந்த மக்களின் உழைப்பினால் தான் சக்திவேலால் படிக்க முடிந்தது என்பதை சிவாஜி கதாபாத்திரம் உணர்த்தும் விதம் உண்மையில் அற்புதம். அதாவது இப்படி காட்டுமிராண்டித்தனமாக சண்டையிட்டுக் கொள்வதை விட்டுவிட்டு பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் படம் சொல்ல வரும் கதை.

ஆனால், இதில் எந்த இடத்தில் சிக்கல் என்றால் சாதியை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு ’போற்றிப்பாடடி பொண்ணே’ என்ற பாடலையும் போட்டுவிட்டு எப்படி அந்த பிரச்னையை சரி செய்ய முடியும். அந்த உலகத்திற்கு போனால் நீங்களும் கடைசியில் கொலைகாரர் ஆவீர்கள் என்றே சக்திவேல் கதாபாத்திரம் சொல்கிறது. அதாவது, சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கதை எழுதிய கமல்ஹாசனுக்கு இருந்தாலும் சாதிய தன்மையை ஒருவிதமாக குளோரிபை செய்யும் தன்மை படம் நெடுக இருக்கிறது. ஏழை மக்களுக்காக சக்திவேல் கதாபாத்திரம் நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அந்த கதாபாத்திரம் என்னவாக இருந்து அதனை செய்கிறது என்பது தான் சிக்கலாக இருக்கிறது. சக்திவேலின் தந்தையான சிவாஜி கதாபாத்திரம் அதே ஊரில் வாழ்ந்து அதே ஊரிலேயே உயிரை விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரம். அவரது கேரக்டரில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், சக்திவேலின் கதாபாத்திரம் ஒரு புரட்டகனிஸ்ட் கதாபாத்திரம். அந்த ஊருக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். கடைசியில் அவனயும் கொலைகாரன் ஆக்கிவிட்டது. இந்த மாற்றங்களை ஒவ்வொரு அங்குலமாக கமல் சொல்லியிருப்பார். திரைமொழியாக அவ்வளவு அற்புதமான படைப்பு. ஆனால், அதுவும் கனவே ஆனது என்பதுதான் பிரச்னை. தேவர் மகன் திரைப்படத்தின் தாக்கம் அதன் பிறகு பலரையும் அதுபோன்ற கதையை தேர்ந்தெடுக்க உந்தித் தள்ளியது.

பருத்திவீரனின் தாக்கம் எப்படி இருந்தது?

தேவர் மகன் போன்ற படங்களின் தொடர்ச்சியே பருத்திவீரன். பருத்திவீரன் படத்தின் சிக்கல் என்னவென்றால் பருத்திவீரனை எல்லோரும் கொண்டாடினார்கள். முத்தழகுவையும் எல்லோரும் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள். ஆனால், பருத்திவீரன், முத்தழகு மரணங்களுக்காக பெரிய அளவில் வருத்தப்படவேயில்லை. முத்தழகு எதனால் இறந்து போனாள்? அதற்கு காரணமான சூழலை யாரும் வெறுக்கவே இல்லை. பரிதாபப்பட்டார்கள், ஆனால், அது எதனால் என்பதைவிட காதலர்கள் சேராமல் போய்விட்டார்களே என்பதில் இருந்த வருத்தம்தான். முத்தழகின் வாழ்க்கை பருத்திவீரனால் காவு வாங்கப்பட்டது. பருத்திவீரனின் வாழ்க்கை கழுவ சேர்வையால் பலிகடா ஆக்கப்பட்டது. கழுவ சேர்வையின் வாழ்க்கை சமுதாயத்தின் சாதிய கண்ணோட்டத்தால் பலிகடா ஆனது என்பது பெரிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை.

பருத்திவீரன் கதாபாத்திரத்தின் தாக்கம் பல இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியது. உண்மையில் பருத்திவீரன் ஒரு சீரிழவு கதாபாத்திரம். ஜெயிலுக்கு போவதை, குடிப்பதை, பெரியவர்களிடம் லந்து செய்வதை ஊக்குவிக்கும் தன்மை மேலோங்கியது. தேவர் மகன் படத்தில் சக்திவேலிடம் இருந்த ஒருவித புரட்டகனிஸ்ட் தன்மை இதில் சுத்தமாக இல்லை. உண்மையில் பருத்திவீரனில் பருத்திவீரனின் தந்தை மருதுவின் கதாபாத்திரமும், அவருக்கு மனைவியாக வருபவரின் கதாபாத்திரமுமே சிறப்பானதாக இருந்தது.

சாதியம் கடந்து விஸ்வாசமாக இருந்தார் மருது. சாராயம் காய்ச்சும் தொழிலே வேண்டாம், விவசாயம் செய்யலாம் என்ற முடிவை எடுத்து அதனை நோக்கி தன்னுடைய கணவரை கொண்டு சென்றார் மருதுவின் மனைவி. அது நிச்சயம் நல்ல திருப்பம். விவசாயத்திற்கு மாறியது. ஆனால், பருத்திவீரனும், செவ்வாழையும் என்ன வேலை செய்து வாழ்ந்தார்கள் என்றே கடைசிவரை சொல்லவில்லை. அவர்கள் எந்த நேரமும் குடித்துக் கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருக்கிறார்கள். இதில் பெண்களுடான தகாத உறவு வேறு. இவையெல்லாவற்றையும் தாண்டி பருத்திவீரன் இறுதியில் பெண்ணின் காதலால் மாறிவிடுகிறான் என்றாலும், அது அழுத்தமாக எல்லோருடைய மனதிலும் பதிந்ததா? என்பது சந்தேகமே.

பருத்திவீரன் வழியில் மதயானைக் கூட்டம்

தேவர் மகன் படத்தில் சிந்தனையை தூண்டும் பல நல்ல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தது. அது கதையாசிரியர் கமலின் இண்டெட்டை வெளிப்படுத்தியது. பருத்திவீரனின் அது குறைவாக இருந்தது. மதயானைக் கூட்டத்தில் அவர் மிகவும் குறைவானதாகவே இருந்தது. விக்ரம் சுகுமாரன் இயக்கிய மதயானைக் கூட்டம் படத்திலும் அந்த சமுதாயத்தில் நிலவி வரும் முரட்டுத் தனங்களாலும் வாழ்வியல் சிக்கலாலும் ஒரு இளைஞர் எப்படி தன்னுடைய உயிரை விடுகிறான் கொலை செய்யப்படுகிறான். அந்த கொலையை எப்படி பெருமிதமாக நினைக்கிறார்கள் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். நல்ல கதை அம்சம் கொண்ட படம் தான். ஆனாலும், மேற்சொன்ன சிக்கல்கள் அதிகமாகவே இருக்கிறது. அதாவது நாம் ஒரு சாதிய பெருமிதத்தை குளோரிபை செய்துகொண்டே அதற்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடமுடியாது. அதற்கு மதயானைக் கூட்டம் போன்ற படங்கள் ஓர் உதாரணம்.

எப்படிதான் படம் எடுக்க வேண்டும்?

சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு சமுதாயத்தின் வாழ்வியலை காட்சிப்படுத்தினாலும், அந்த படம் சொல்லும் செய்தியில் முற்போக்கான அம்சம். அதாவது அவனது வாழ்வியலை செம்மைப்படுத்தும் அம்சங்களின் தாக்கம் அதிக அளவில் இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஏழை மக்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும், படிப்பின் முக்கியம் ஆகியவற்றை லீட் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பருத்திவீரன் போன்ற படங்களின் தாக்கம் எதிர்வினையாகவே முடியும்.

இறுதியாக, பருத்திவீரன் திரைப்படம் திரைமொழியில் புதிய உச்சத்தை தொட்டது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. யுவனின் இசையும், அமீரின் உலகத்தரம் வாய்ந்த காட்சிப்படுத்திய விதமும் நம்மை எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால், சினிமா என்பது காலம் கடந்து நிறகக்கூடியது. அதனை மனதில் வைத்து படங்களை இயக்க வேண்டும். அதுவும் சாதி ரீதியாக ஒரு சமுதாயத்தின் வாழ்வியலை சொல்லும் போது மிகவும் நுட்பான அணுகுமுறையுடன் எதிர்கொள்ள வேண்டும். படத்தின் தாக்கத்திற்கும் அதன் இயக்குநரே பொறுப்பு.