part 2 movies pt
சினிமா

“இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்!”.. சாமி² To இந்தியன்2 |Part -2 பரிதாபங்கள் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு எழுந்த விமர்சனங்கள், வெற்றி - தோல்வியை திரும்பிப்பார்க்கும் சிறு முயற்சியை மேற்கொள்கிறது இக்கட்டுரை. இதன் எல்லா புகழும் இந்தியன் -2 வெளியீட்டையே சேரும்.

யுவபுருஷ்

Part 2 பரிதாபங்கள்

ஞாயிற்றுக்கிழமையில் நாட்டுக்கோழி ஒன்றை பிடித்து அடித்து நன்றாக குழம்பு வைக்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். குழம்பில் கறி வேகும் நேரம் பார்த்து விருந்தினர்கள் 4 பேர் வந்துவிட்டால் அவர்களுக்கும் கறி சோறு போடலாமே என்ற ஆவலில், கூடுதலாக ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றினால் அந்த விருந்து எப்படி இருக்கும். கொஞ்சம் கஷ்டம்தானே. நன்றாக இருந்த குழம்பை நாமே கெடுத்தபடி, படு சூப்பராக ஒரு படத்தை எடுத்துவிட்டு, அடுத்த பாகத்தை எடுக்கிறேன் பார் என்று வெந்த கறியில் சொம்பு தண்ணீரை ஊற்றிய இயக்குநர்களும் இருக்கிறார்கள். கூடுதலாக ஒரு கோழியை வாங்கி அதையும் குழம்பாக வைத்து நல்ல திரைப்படத்தைக் கொடுத்து விருந்து வைத்த இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அந்த வகையில், முதல் பாகத்தை எடுத்து 2ம் பாகத்தையும் கொடுத்து அதில் வெற்றி, தோல்வியை சந்தித்த படங்களை பார்க்கலாம்.

எப்போது தொடங்கியது 2ம் பாக வெளியீடுகள்?

தமிழ் சினிமாவில் முதல் பாகத்தில் செத்துப்போய் 2ம் பாகத்திலும் பேயாக வந்து படாத பாடு படுத்தும் கதைகள் இரண்டாம் பாகமாக வருவது சமீபகாலமாக வழக்கமாக வருகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2வது பாகம் எடுக்கப்பட்ட படம் என்றால் அது கமலின் கல்யாணராமன் திரைப்படம்தான்.

ஜிகே ரங்கராஜன் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோரது நடிப்பில் 1979ம் ஆண்டு வெளியானது கல்யாணராமன் திரைப்படம். இதில் அப்பாவி கமல் கொல்லப்பட்டதையடுத்து அந்த ஆவி இன்னொரு கமலின் உடலில் புகுந்து பழிவாங்கும். இந்த படம் வெளியான சமயத்தில் பெரும் ஹிட் அடித்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1984ல் இரண்டாம் பாகமான ஜப்பானில் கல்யாணசுந்தரம் வெளியானது. முதல் பாகம் அளவுக்கு இல்லை எனினும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தது இத்திரைப்படம். இப்படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்கியிருந்தார். இரு படங்களுக்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார்.

பில்லா - பில்லா 2

1980ம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தின் கதையை கொஞ்சமாக பட்டி டிங்கரிங் செய்து, புது ஸ்டைலாக அஜித்தின் மிடுக்கான தோற்றத்தில் வெளியான படம்தான் பில்லா. தீனாதான் அஜித்திற்கு முதல் மாஸ் படம் என்றாலும், அதை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது என்னவோ பில்லாதான். ’நாம வாழணும்னா யார வேணாலும்.. எத்தன பேர வேணாலும் கொள்ளலாம்” என்ற ட்ரேட் மார்க் வசனத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் சிலிர்த்துப்போய் சிலாகித்தனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவனின் தெறி இசையுடன் நயன்தாரா, நமீதா, பிரபு போன்ற ஸ்டார்களுடன் வெளியான பில்லா பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அஜித்தாகட்டும், நயன்தாராவாகட்டும் அதகளம் செய்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சக்ரி டோலட்டி இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான படத்தின் 2ம் பாகம் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை என்றாலும், சுமார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஓடியது. விமர்சனங்கள் வசூலைத் தாண்டி, பில்லாவுக்கு 2 தூண்களே இருந்தன. ஒன்று அஜித், மற்றொன்று யுவன்.

சாமி VS போதும் டா சாமி

ஹரி - விக்ரம் கூட்டணியில் 2003ம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்தது சாமி திரைப்படம். எத்தனை முறை டீவியில் பார்த்தாலும் இன்றளவும் சலிக்காத படங்களில் ஒன்றுதான் சாமி. பாடல்களாகட்டும், விக்ரமின் நடிப்பாகட்டும், த்ரிஷாவின் காதலாகட்டும் அத்தனையுமே ரசிக்க வைக்கும். ஹரியின் விறுவிறுப்பு படத்தை ஜெட் வேகத்தில் இழுத்துச்செல்லும். தான் திருநெல்வேலி மாவட்ட டிஎஸ்பி என்று விக்ரம் சொல்லும் வசனம் அவ்வளவு அருமையாக இருக்கும்.

இப்படிப்பட்ட படத்தைத்தான், தொடர்ச்சியாக 2ம் பாகம் எடுக்கிறேன் பார் என்று ‘போதும் டா சாமி’ என்ற அளவுக்கு எடுத்து வைத்திருந்தார் ஹரி. செத்துப்போன தாதாவின் வாரிசு தாதா, ஆறுச்சாமியின் மகன் ராம்சாமி(விக்ரம்) இருவரும் தங்கள் பங்கிற்கு செய்திருந்தாலும், வலுவான திரைக்கதை இல்லாததால் பெரிதாக சோபிக்கவில்லை. வசூலிலும் சரி, விமர்சனத்திலும் சரி சாமி 2 பெரிதாக சோபிக்கவில்லை.

இதுதான் ரியல் கம்பேக்.. சென்னை 600028

நட்பு ஒரு பக்கம்.. கிரிக்கெட் ஒரு பக்கம் என்று ஒரு இயக்குநர் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு ஸ்கோர் செய்ய முடியுமா என்று படம் பார்த்தவர்களை மூக்கு மேல் விரல் வைக்க வைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜா இசையாகட்டும், துள்ளல் இளைஞர்களின் இயல்பான நடிப்பாகட்டும், நம்ம பக்கத்து வீட்டு பசங்க மாதிரியே இருக்காங்களே என்று கனெக்ட் செய்துகொள்ளும் அளவுக்கு பெயரை வாங்கித்தந்தது சென்னை 28.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூனியர்கள் சீனியர்களாக கலக்கும் படமாக 2ம் பாகம் வெளியாக, அதே ஹீட்டில் ஹிட் அடித்தது வெங்கட் பிரபுவின் சென்னை 28. ஒரு நல்ல படத்தை கொடுத்துவிட்டோம், 2ம் பாகத்தில் என்ன செய்வதென்று யோசிக்காமல், வெற்றி பெற்ற அணியினர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதில் தொடங்கி படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது வரை 2ம் பாகத்திலும் ஹிட் அடித்தது சென்னை 28.

சண்டக்கோழி - சண்டக்கோழி 2

லிங்குசாமி - விஷால் கூட்டணியில் 2005ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி திரைப்படம் விஷாலுக்கு துவக்கத்திலேயே ஹிட் படமாக அமைந்தது. யுவனின் அதிரடியான இசை, விஷாலின் ஆக்‌ஷன் என அனைத்துமே கச்சிதமாக அமைய வெற்றிநடைபோட்டது சண்டக்கோழி. 10 கோடியில் தயாரான படம், சுமார் 30 கோடிக்கும் மேல் வசூலித்தது. வெற்றிக்கொடி கட்டிய படத்தின் 2ம் பாகம் அதே எதிர்பார்ப்பில் உருவானது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு யுவனின் அதே இசை, விஷாலின் அதே மிடுக்கு, ராஜ்கிரணின் மிரட்டல், கூடுதலாக கீர்த்தியின் குறும்பு, வரலட்சுமியின் வில்லத்தனம் எல்லாம் சோபிக்க ஓரளவுக்கு கைகொடுத்தது சண்டக்கோழி 2.

எந்திரன் - 2.0

தமிழிலும் இப்படி ஒரு படத்தை கொடுத்துவிட முடியுமா என்று இன்றளவும் பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டத்தை கொட்டி, புத்தம் புது கிராஃபிக்ஸ்களை சேர்த்து படு பயங்கரமான ஹிட் படமாக எந்திரனை கொடுத்திருந்தார் சங்கர். சாதி சண்டைகள், ஊர் பிரச்னைகள், காதல் என்று அறைத்த மாவையே அறைத்த தமிழ் சினிமாவில், சிட்டி ரோபோ உலகத்தை தனக்கென புது பாணியில் காட்டியிருந்தார் சங்கர். சொன்னது அனைத்தையும் தட்டாமல் கிட்டத்தட்ட தனது 60 வயதிலும் ரஜினி நடித்துக்கொடுக்க, இதற்கு மேல் எந்திரனுக்கு இசையமைக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு மியூசிக் போட்டிருந்தார் ரகுமான்.

செல்ஃபோன் டவரால் பறவைகளின் அழிவு, அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு என்று ஈசியான கதையை எந்திரன் அளவுக்கு பிரமாண்டமாய் கொண்டு சென்றாலும் எமோஷனில் ஏற்பட்ட சறுக்கல் எந்திரன் 2 வான 2.0-க்கு மைனஸ் பாயிண்ட். மற்றபடி வசூலிலும் சரி, விமர்சனத்திலும் சரி 2.0 பெற்றது வெற்றிதான்.

மாரி - மாரி 2

பாலாஜி மோஹன் இயக்கத்தில் தனுஷ், காஜல் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான மாரி திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக அனிருத்தின் இசையில் உருவான பாடல்கள் அடுத்த சில மாதங்களுக்கு சிலாகிக்கப்பட்டது.

புறா சண்டையை வைத்து கேங்க் வார் ஸ்டோரி ஓரளவுக்கு காட்டப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டு வெளியான படத்தின் 2ம் பாகத்தின் கதை தரிகெட்டு ஓடியதால் முதல் பாகம் அளவுக்கு சோபிக்கவில்லை. விமர்சன அளவிலும் சரி, வசூல் அளவிலும் சுமாராக ஓடினாலும், ரவுடி பேபி பாடல் உலகம் முழுக்க ஹிட் அடித்தது.

வெண்ணிலா கபடி குழு - வெண்ணிலா கபடி குழு 2

அடடே நம்மல மாதிரியே கபடி விளையாடுறாங்களே என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு படமாக்கப்பட்டு 2009ம் ஆண்டு வெளியானது வெண்ணிலா கபடிக்குழு. இன்று விடுதலை, கருடன் போன்ற படங்களில் நாயக அவதாரன் எடுத்திருக்கும் சூரிக்கு பரோட்டா சூரி என்ற பெயரை வாங்கிக்கொடுத்த இப்படம் விஷ்ணு விஷாலுக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் பருத்தி வீரன் போன்று ட்விஸ்ட்டான கிளைமேக்ஸை தந்ததால் அதன் தாக்கம் சில நாட்களுக்கு இருக்கவே செய்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வ சேகரன் இயக்கத்தில் வெளியான படத்தின் 2ம் பாகம் அந்தளவுக்கு ஓடவில்லை.

சிங்கம் - சிங்கம் 2

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2010ம் ஆண்டு தெறியாக வெளியானது சிங்கம் திரைப்படம். போலீஸ்காரன்னா இப்படித்தான்யா இருக்கணும் என்று சொல்லும் அளவுக்கு இயக்கம், நடிப்பு மற்றும் இசை என்று படத்தில் அனைத்துமே அப்படி இருந்தது. ‘சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்’ என்று கர்ஜித்தபடியே வெளியான படம், பாக்ஸ் ஆஃபில் வசூலிலும் சரி, விமர்சனத்திலும் சரி படு ஜோர் என்றே சொல்லலாம்.

இதுவரை நாம் பார்த்த பட்டியலில் முதல் பாகம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் பெரும்பாலும் சொதப்பல் என்று இருக்க, சிங்கம் திரைப்படமோ அதை நொறுக்கியது. 2013ம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றிபெற்றதால் மூன்றாம் பாகத்தையும் இயக்கினார் ஹரி. அது ஓரளவுக்கு சுமாராக ஓடியதால் அத்தோடு முடிந்தது சிங்கம் தொடர்.

விஸ்வரூபம் - விஸ்வரூபம் 2

நடிகர் கமலின் இயக்கத்தில் மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்த விஸ்வரூபம் திரைப்படம் வசூலை வாரிக்குவிக்கவே, 2ம் பாகத்தையும் அவரே இயக்கினார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான படத்தின் இரண்டாம் பாகம், அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. முதல் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் வாயடைக்க வைத்த கமல், 2ம் பாகத்தில் ஏனோ அதனை தவறவிட்டிருந்தார். முதல் பாகத்தில் என்னவெல்லாம் படத்திற்கு சிறப்பாக அமைந்ததோ, அது எதுவுமே இல்லாததுதான் 2ம் பாகத்தின் தோல்வி என்றும் சொல்லலாம்.

களவாணி - களவாணி 2

ஒரே ஒரு ஒன் லைன் கதையை எந்தளவுக்கு காமெடியாக, கலாட்டாவாக அசத்தலாக எடுக்க முடியுமோ, அந்தளவுக்கு ஜோராக எடுத்திருந்தார் சற்குணம். அறிவழகன் என்ற அழகான பெயரை அறிக்கி என்று கூறுவதும், விமல் சொல்லும் எல்லா பொய்களையும் ஓவியா நம்பி ஏமாறுவதும், அண்ணனாக வரும் இளங்கோவின் நடிப்பும் எல்லாமே படத்திற்கு சிறப்புதான்.

களவாணித்தனம் தவறுதான் என்றாலும், களவாணி படத்தை ரசிக்கவே செய்தது பார்வையாளர்கள் பட்டாளம். ஆனால், வெற்றிப்படத்திற்கு 2ம் பாகம் எடுத்துவிட்டால் அதுவும் வெற்றியாகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ 9ம் ஆண்டுகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டு வெளியான களவாணி 2 படம் பெரிதாக வெற்றிபெறவில்லை.

நாடோடிகள் - நாடோடிகள் 2

நட்பு என்று வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் இறங்கி செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக 2009ம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. படத்தில் ஏதோ ஒன்று ப்ளஸ் இல்லை. எல்லாமே ப்ளஸ் என்று சொல்லும் அளவுக்கு எடுத்திருந்தார் சமுத்திரக்கனி.

ஆனால், சாதி பிரச்னை, ஆணவக்கொலை என்ற லெவலிற்கு ஏறிய 2ம் பாகம் அந்தளவுக்கு ஓடாதது கொஞ்சம் சோகம்தான். ஆனாலும், தங்களால் முடிந்த பங்களிப்பை செவ்வனே செய்திருந்தனர். குறிப்பாக சசிகுமாருக்கு காதல் ரொமான்ஸ் இந்த அளவுக்கு வருமா என்று அனைவரும் வியந்து பார்த்தனர் என்றால் மிகையல்ல.

காஞ்சனா - காஞ்சனா 2

முனி படத்தில் தொடங்கிய பேய் மோகம் காஞ்சனா 3ம் பாகம் வரை லாரன்ஸை விடாமல் துரத்தியது என்றால் என்னத்தைச் சொல்ல. சந்திரமுகி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியான முக்கியமான பேய் படம் என்றால் முனி படத்தைச் சொல்லலாம். முனியில் தொடங்கி அடுத்தடுத்து காஞ்சனா படங்களில் பேயை பார்த்து பயப்படும் லாரன்ஸ், அந்த பேயிக்கே உதவுவது எவ்வளவு பெரிய முரண்.

ஆனால், அத்தனை முரண்களையும் தாண்டி, அருந்ததி படத்திற்கு பிறகு அற்புதமான பேய் படங்களாக வெளியாகின காஞ்சனா 1 மற்றும் 2. ஆனால், இந்த வெற்றிப்பயணம் 3ம் பாகம் வரை தொடரவில்லை. பேய விரட்டுனது போதும் சாமி என்ற அளவுக்கு போனதால் முடிவுக்கு வந்தது காஞ்சனா பயம்.

எத்தனை அரண்மனை?

ஒரே ஒரு அரண்மனைதான். அதில் ஒரு பேய் இருக்கும். அது துரத்தி துரத்தி அடிக்கும். அதிலிருந்து மற்றவர்களை சுந்தர் சி காப்பாற்றினாரா இல்லையா? எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்பதுதான் அரண்மனை தொடர் சொல்ல வந்த சேதி. 2014, 2016 ஆண்டுகளில் முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி ஹிட் அடிக்க 2021 மூன்றாவது அரண்மனையை கட்டியிருந்தார்(இயக்கியிருந்தார்) சுந்தர் சி.

தொடர்ந்து, இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்றபடி விமர்சனங்கள் வந்ததால், கதையை கொஞ்சம் வேறு மாதிரி மாற்றி தைரியமாக 4ம் பாகத்தையும் இந்த ஆண்டு வெளியிட்டார் சுந்தர் சி. அச்சச்சோ என்று சொல்ல முடியவில்லை. ஆனால் அச்சச்சோ பாடலை பார்க்காமலும் யாரும் வெளியே வரவில்லை. ஆம், மொத்த படமும் முடிந்த பிறகு செண்டிமெண்ட் சமந்தாவை சற்று கிளாமராக காட்டி படத்தை முடித்திருந்தார். ராசி கண்ணாவையும் கூட. அது எப்படி ஒரு பாத்திரத்தை பார்த்து அழ வைக்கும் அளவுக்கு காட்டிவிட்டு, அதே பாத்திரத்தை ஏற்று நடித்தவரை (தமன்னா) அந்தளவுக்கு கிளாமராக காட்ட முடிகிறதோ என்று கேட்காமல் இருக்க முடியாது. எது எப்படியோ, படம் விமர்சன, வசூல் ரீதியாக வெற்றிதான்.

சந்திரமுகி - சந்திரமுகி 2

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு ஓடிய முக்கியப்படமாக அமைந்தது சந்திரமுகி. ரஜினிகாந்த், வடிவேலு, ஜோதிகா மற்றும் நயன்தாரா என்று நடிகர் பட்டாளமே இணைந்த சந்திரமுகி படம் வசூலையும் வாரி குவித்தது. கண்ணில் டார்ச் லைட்டை அடித்து, சந்திரமுகி வந்துவிட்டாள் என்று காட்டியதும், வேட்டையனை கொன்றுவிட்டதாக பேயை ஏமாற்றுவதும் கொஞ்சம் இடித்தாலும் ‘லகலகலகலகலக’ என்ற சத்தம் ஒலிக்காத இடமே இல்லை.

அப்படிப்பட்ட படத்திற்கு 2ம் பாகம் என்று எடுக்கிறேன் என்ற பெயரில் அதே மாவே வேறு தோசையாக ஊற்றி இதுதான் சந்திரமுகி 2 என்று ஏமாற்றத்தைக் கொடுத்தார் பி வாசு. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்று சொல்லும் அளவுக்கு படத்திற்கு விமர்சனங்கள் வந்ததால், வசூலில் தோல்வியை சந்தித்தது சந்திரமுகி. அதிலும் கங்கனாவின் போர்ஷன் இருக்கிறதே. அதுதான் கொடுமை.

இந்தியன் - இந்தியன் 2

லஞ்சம் கொடுக்காமல் மகளையே சாகவிட்டு, சாவிற்கு காரணமானவர்களை கொன்று தீர்ப்பது. தவறு செய்தது மகனாகவே இருந்தாலும் கொலை செய்வது என்று வியக்க வைக்கும் கதைக்கருவைக் கொண்டு வெளியான இந்தியன் படம் 90களில் மெச்சப்படும் படமாகவே இருந்தது. ஒரு படத்திற்கு இதற்குமேல் அருமையாக இசையமைக்க முடியாது என்று சொல்லும்படி இசையமைத்திருந்தார் ரகுமான். கமலின் நடிப்பைச் சொல்லவா வேண்டும்.

அப்படி எல்லாம் ப்பா.. என்று சொல்ல வைத்த இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்தியாவுக்கு வரவழைத்து கல்லைக்கொண்டு அடித்தது இந்தியன் -2 படக்குழு. தியேட்டரில் படம் பார்த்தவர்களையும் கூடத்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரமாக பார்த்து தாத்தா வராரே கதறவிடப்போறாரே என்று வெளியானது ஒரு பாடல். அனிருத் இசையை குறை சொல்லி என்ன ஆகப்போகிறது. மீன் விற்கும் அக்கா அதில் கோலிக்குண்டை போட்டு ஊழல் செய்கிறார் என்றெல்லாம் எப்படி யோசித்தாரோ ஷங்கர். இதுமட்டுமல்ல கோ பேக் இந்தியன் என்று சொல்லும் அளவுக்கு பெயரை பெற்றுள்ளது இந்தியன் 2. இந்தியன் தாத்தா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை கொஞ்சம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் மேற்சொன படங்களை தாண்டி வேலையில்லா பட்டதாரி, பொன்னியின் செல்வன், கலகலப்பு, நான் அவன் இல்லை, ஜிகர்தண்டா, பீட்சா, அப்பா, டார்லிங், பசங்க, கோலி சோடா, உறியடி, சதுரங்க வேட்டை, அமைதிப்படை டிமாண்டி காலனி, பிச்சைக்காரன் மற்றும் தலைநகரம் போன்ற படங்களுக்கும் 2ம் பாகம் வெளியாகி பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

எழுத்து: யுவபுருஷ்