பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளின் எண்ணிக்கை உயரும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதிய வன்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை பதிவு செய்துள்ள அப்படத்தில் நடிகர்கள் கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 28ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஆயிரத்து 200 திரையரங்குகள் இருக்கும் நிலையில் 120 திரையரங்குகளில் மட்டுமே பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டுள்ளது. செக்கச்சிவந்த வானம், சாமி ஸ்கொயர் உள்ளிட்ட படங்கள் பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்படுவதால் பரியேறும் பெருமாள் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் திரைப்படத்தை திரையிட தயாரிப்பாளர் சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர் பா.ரஞ்சித் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, திரையரங்க ஒதுக்கீட்டில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீடு இல்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நாளை முதல் மேலும் பல திரையரங்குகளில் பரியேறும் பெருமாள் திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரம், மாயா உள்ளிட்ட படங்களை தயாரித்தவரும், தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட( #அருவி #மாநகரம் ). மக்கள் ஆதரவை #பரியேறும்பெருமாள் பெற்றுவிட்டது! காட்சிகள் உயரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.