சினிமா

வேலூரில் தடையின்றிப் புழங்கும் ஹான்ஸ்

வேலூரில் தடையின்றிப் புழங்கும் ஹான்ஸ்

webteam

வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதை பொருள் தடையில்லாமல் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பான்பராக், ஹான்ஸ் போன்ற பல போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கடைகளில் விற்பவர்கள் மீது காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், ராணிபேட்டை, அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதை பொருள் தடையில்லாமல் விற்கப்பட்டு வருகிறது. 

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் சாலைகளில் காவல் துறையின் சோதனைச்சாவடி மற்றும் பாதுகாப்பு இல்லாத அல்லது பாதுகாப்பு குறைந்த வழிகளை பயன்படுத்தி வாகனம் மூலம் ஹான்ஸ் போதைப் பொருள் எடுத்து வரப்பட்டுகிறது. அவை ஒட்டுமொத்தமாக கடைகளுக்கு கொண்டு செல்லாமல் சிறிது சிறிதாக பிரித்து வினியோகிக்கப்பட்டு வருகின்றன. 
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய குட்கா விவகாரத்தால் அதிரடி வேட்டையாக ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பதை காவல் துறை சோதனை செய்து பறிமுதல் செய்தது. ஆனாலும் சில கடைகளில் ஒரு ஹான்ஸ் பாக்கெட் அதிக பட்சமாக 30 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது காவல் துறையின் நடவடிக்கை தளர்ந்துள்ளதால் பல இடங்களில் தாராளமாக ஹான்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கெடுபிடி காலத்தில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஹான்ஸ் தற்போது 12 முதல் 15 ரூபாய் வரை அனைத்து சிறு கடைகளிலும் விற்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறை எடுக்கும் நடவடிக்கையால் ஹான்ஸ் விற்பனை தடுக்கப்படுவதும், காவல் துறை கண்டுகொள்ளத போது, போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.