பத்மாவத் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய, பத்மாவத் திரைப்படம் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளியாகாது என்று அம்மாநில அரசுகள் அறிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், பத்மாவத் திரைப்படம் வெளியாவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணி பத்மாவதின் வரலாறு இந்த திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக, ஆரம்பம் முதலே பல்வேறு அமைப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, ’பத்மாவத்’ என்று படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் படம் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மாவத் படத்தின் தமிழ், ட்ரெய்லர் நேற்று வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது.