தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பத்மாவத் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஜனவரி 25-ம் தேதி பத்மாவத் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் வெளியான அன்று வட மாநிலங்களில் பெரிய அளவில் வன்முறை சம்பங்கள் நடைபெற்றன. இதனால், பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. பின்னர் மெல்ல மெல்ல அடுத்தடுத்த நாட்களில் படம் ரிலீஸ் ஆக ஆரம்பித்தது. தற்போது, திட்டமிட்டபடி 75 சதவீதம் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
தாங்கள் கடவுளாக வணங்கும் ராணி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் பத்மாவத் திரைப்படம் இருப்பதாக கூறித் தான் கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், படமோ பத்மாவதி கதாபாத்திரத்தையும், ராஜபுத்திரர்களின் வீரத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ளது. இதனால், போராட்டம் நடத்தியவர்கள் மீது எதிர்ப்பு மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதனால், பத்மாவத் படத்திற்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் என்ற விமர்சனமும் உள்ளது.
இந்நிலையில், பத்மாவத் திரைப்படம் கடந்த 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. முன்னோட்ட காட்சியில் ரூ5.07 கோடியும், முதல் நாளில் 19 கோடி ரூபாயும் வசூல் ஆனது. அதேபோல், 2-வது நாளில் அதிகபட்சமாக 32 கோடி ரூபாய் வசூல் ஆனது. கடந்த இரண்டு நாட்களில் முறையே ரூ.27.09, ரூ.31.26 கோடிகள் வசூல் ஆகியுள்ளது. மொத்தமாக இதுவரை ரூ.114.58 கோடி ரூபாயை பத்மாவத் படம் வசூல் செய்துள்ளது. இன்னும் 25 சதவீதம் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகாத நிலையிலும் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பத்மாவத் படத்தில் நடித்த தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷகித் கபூர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக ரன்வீர் சிங்கின் மிரட்டலான நடிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் பாராட்டுகள் குவிகின்றன.