சினிமா

“நான் உண்மையானவன் என விஜய்க்கும் தெரியும்” - பி.டி.செல்வகுமார் விளக்கம்

“நான் உண்மையானவன் என விஜய்க்கும் தெரியும்” - பி.டி.செல்வகுமார் விளக்கம்

webteam

விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை என அவரது முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமான காலத்தில் இருந்து அவரது மக்கள் தொடர்பாளராக இருந்தவர் பி.டி. செல்வகுமார். அவரை சுற்றி இப்போது ஒரு சர்ச்சை தொடங்கியுள்ளது. இவர் சிக்கி இருப்பது விஜய் தொடர்பான ஒரு சர்ச்சையில். இதற்கே செல்வகுமார் நடிகர் விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை தயாரித்தவர். இவர் மீதுள்ள பற்றால்தான் இந்தப் படத்தை தயாரிக்க விஜய் இவருக்கு வாய்ப்பளித்தார் என்பது பலரும் அறிந்த தகவல்.

சமீபத்தில் இளையராஜா தனது பாடல்களின் ராயல்டி சம்பந்தமான பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வரை சென்று உரிமைக்கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த ராயல்டி சம்பந்தமான உரிமையை இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பி.டி. செல்வகுமார் தரப்பும் நீதி மன்றம் வரை சென்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த செல்வகுமார், தனக்கு விஜய்க்கும் இடையிலான 25 ஆண்டுகால பழக்கத்தை பற்றி சில கருத்துகளை முன் வைத்திருந்தார். அதில், சமீப காலமாக விஜய், தனது பட வசூல்களின் மூலம் ரஜினி மற்றும் அஜித் இருவரையும் விட உயர்நிலைக்குச் சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். 

மேலும் தமிழத்தைப் பொறுத்தவரை ‘சர்கார்’ வசூலை விட ‘2.0’ வசூல் குறைவானதுதான் என்றும் கூறியிருந்தார். இதுபோக இன்னும் 7 ஆண்டுகளுக்குள் விஜய், தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் அவர் பேசியிருந்தார். இந்தக் கருத்து சம்பந்தமாக அவரது பேச்சுக்கு இப்போது விஜய் தரப்பில் இருந்து மறுப்பு வெளியாகியுள்ளது. 

ஆனால் இந்த விவகாரத்தில் விஜய் நேரடியாக ஒன்றையும் கூறவில்லை. அவரது தலைமை ரசிகர்மன்ற நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் மூலம் ஒரு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில், “நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலமாக நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் அவர், நமது மக்கள் இயக்கத்தின் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை அவர் வகிக்கவில்லை. இருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒருசிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அத்தோடு நமது தளபதி விஜய் அவர்கள் எந்தக் காலகட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை. அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையை ஆனந்த் வெளியிட்டுள்ளார். இவர்தான் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக இருந்து செயலாற்றி வருகிறார். இவர் புதுவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். விஜய் மீது உள்ள பற்றால் அந்த அரசியல் பணிகளை விட்டுவிட்டு முழுநேரமாக விஜய் மக்கள் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது அறிக்கைக்கு பி.டி.செல்வகுமார் ஒரு மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய்க்கும், அவருடைய அப்பாவுக்கும் நான் 25 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கையுள்ள மனிதராக, மக்கள் தொடர்பாளராக, அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தேன். பேட்டி கொடுப்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேட்டி கொடுக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தைத்தான் நான் பதிவு செய்திருந்தேன்.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யும் செயலாகத்தான் எனக்குத் தெரிகிறது. நான் எந்தளவிற்கு உண்மையானவர் என்பது விஜய்க்கும் தெரியும். அவருடைய குடும்பத்தாருக்கும் தெரியும். என்மீது நம்பிக்கை இருந்ததால்தான், எனக்கு ‘புலி’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்” என்று ஒரு நீண்ட கடித்தத்தை அளித்துள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் விஜய்க்கு மக்கள் தொடர்பாளராக மட்டுமில்லாமல், ரசிகனாகவும் இருந்து வந்தேன். தற்போதும் அப்படித்தான் இருந்து வருகிறேன். இளையராஜாவின் ராயல்டி தொகைக்கு எதிராகக் குரல் கொடுப்பது, ஒரு தயாரிப்பாளராக சக தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

விஜய்யின் ‘ஆதி’, ‘தலைவா’, ‘காவலன்’, ‘மெர்சல்’ போன்ற படங்களின் பிரச்சனைகளின்போதும் அவருடன் இருந்துள்ளேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனையான படம் என்றால், அது ‘புலி’ படம்தான். ‘காவலன்’ பட ரிலீஸின்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக பிரச்னை செய்தபோது கூட, நான் 50 லட்சம் கடன் வாங்கி அந்தப் படத்தை ரிலீஸ் செய்தேன். இது அனைவருக்குமே தெரிந்த உண்மை.

அவர் மீது அன்பும் மரியாதையும் இருப்பதால்தான், என்னால் உண்மையான உழைப்பைக் கொடுக்க முடிந்தது. ‘புலி’ படத்தின்போது ஐடி ரைடு வந்தபோதும் கூட அவருக்குத் துணையாக இருந்தேன். தற்போது விஜய்க்கு பி.ஆர்.ஓ-வாக இல்லை என்றாலும், அவருடன் நல்ல குடும்ப நண்பராகத்தான் இருந்து வருகிறேன். மேலும், விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.

தற்போதும் நான் பல படங்களுக்கு பி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படம் பிரச்னைகளைச் சந்தித்தபோது, அதனைத் தீர்த்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையச் செய்தேன்.

இன்றுவரை நான் விஜய்க்கும், விஜய் குடும்பத்துக்கும் உண்மையான விசுவாசம் உள்ள மனிதராகத்தான் இருந்து வருகிறேன். எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிக்கை தொடர்பாக அவரிடம் சில கேள்விகளை நாம் முன் வைத்தோம். அதனை கேட்ட அவர், எல்லாவற்றையும் அறிக்கையாக கொடுத்துவிட்டேன் என்று கூறினார்.