சினிமா

‘தண்ணீர் தண்ணீர்’ அமெரிக்க படத்தின் தழுவலா...?

‘தண்ணீர் தண்ணீர்’ அமெரிக்க படத்தின் தழுவலா...?

subramani

உலகில் இதுவரை வறுமையை சந்திக்காத இனக்குழுக்கள் ஏதும் கிடையாது. வடக்கே மழை என்றால் தெற்கே பசி, கிழக்கே புயல் என்றால் மேற்கே செல்வம். இப்படி வரலாறு நெடுக வறுமையும் செழுமையும் மாறி மாறியே நம்மோடு பயணித்து வருகிறது.

Our Daily Bread (1934), தண்ணீர் தண்ணீர் (1981)

இந்த இரு படங்களும் கிட்டத் தட்ட ஒரே கதைக் கருவை கொண்டது மட்டுமல்ல கதாபாத்திர வடிவமைப்பு, காட்சி ஒற்றுமை என பல விசயங்களில் ஒத்துப் போகின்றன.

1934 அமெரிக்காவில் கடும் வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பஞ்சம் நிலவுகிறது. தம்பதிகள் ஜான் மற்றுன் மேரி இருவரும் தங்களுக்கு முறையான வேலை இல்லாததால் கடனில் தவிக்கின்றனர். பலநூறு ஏக்கர்கள் பயனற்றுக்கிடக்கும் ஒரு பெரும் நிலப்பரப்பில் குடியேறுகிறார்கள். சிலநாட்களில் ’க்ரிஸ்’ என்பவன் தனது குடும்பத்தோடு அந்த காலி நிலத்திற்கு வந்து சேர்கிறான். அக்காலகட்டத்தில் மக்கள் பிழைப்புகளை தேடி அமெரிக்காவின் பல இடங்களுக்கு புலம்பெயர்ந்து போனார்கள். தண்ணீர் தண்ணீர் படத்திலும் வறட்சி மக்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்.

இப்படியாக பல குடும்பங்கள் அந்த பகுதியில் தனித்தனியாக வந்து ஒரு குழுவாக இணைகிறார்கள். அவர்களில் மரவேலை செய்பவர், சவரத் தொழிலாளி, புகையிலை வியாபாரி, செருப்பு தைப்பவன், இசைக் கலைஞர் என பலரும் அடக்கம்.

அவர்கள் அனைவரும் பஞ்சத்தால் விரட்டப்பட்டவர்கள். அவர்கள் கூட்டாக இணைந்து அப்பகுதி நிலத்தில் விவசாயம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

கிடைத்த பொருட்களை வைத்து குடில்கள் அமைக்கிறார்கள். ஒரு சிறிய கிராமமாக மாறுகிறது அந்த பெருவெளி. அவர்கள் கூட்டாக உழைத்து நிலத்தை பண்படுத்துகிறார்கள். சோளம் விதைக்கிறார்கள். வானமும் கொஞ்சம் மழையை தூவி அவர்களை ஈரக்கையால் ஆசீர்வதிக்கிறது. ஆனாலும் அவர்களின் விவசாயதிற்கு தேவைக்கு குறைவான அளவே மழை பெறுகிறது அப்பகுதி. வானம் பார்த்த பூமி அதில் சோளக்கதிர்கள் சற்று வளர்ந்த நிலையில் வெயில் சுட்டெரிக்கிறது. “இன்னும் சில நாட்கள் வெயில் இப்படி உக்கிரமாக இருந்தால் நமது கதிர்கள் செத்துவிடும்” என விவசாயி ‘கிரிஸ்’ கண் கலங்கிகிறான். இக்காட்சி வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுவது விவசாயி மட்டும் தான் என்கிறது.

ஜான் அவ்விடத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் சிறிய நதி  இருப்பதை கண்டறிகிறான். உற்சாகமாக ஓடி வந்து தனது குழுவினர்களிடம் நதியை எப்படியாவது முயன்று நம் நிலத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆவேசமாக சூலுரைக்கிறான் என்றாலும் முதலில் அது சாத்தியமான ஒன்றாக அவர்களுக்கு படவில்லை. ஜான் மற்றும் கிரிஸ் கொடுக்கும் ஊக்கத்தினால் குடும்பத்திலுள்ள ஆண்கள் பெண்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கோடாரி போன்ற ஆயுதங்களால் நதியிலிருந்து நிலம் வரை ஒரு நீர்வழிப்பாதை ஏற்படுத்துகிறார்கள். இடையிலிருக்கும் பாறைகளை அகற்றி இரவு பகலாக வியர்வை பொங்க உழைத்து அக்காரியத்தை செய்து முடிக்கிறார்கள்.

இப்போது நதியின் ஒரு கிளையாக நீர் திறக்கப்படுகிறது. வெள்ளம் உற்சாகமாக விவசாய நிலம் நோக்கி பாய்கிறது சோளக் கதிர்கள் உயிர் பெறுகின்றன. அவர்களது வாழ்வு சிறக்கிறது. தண்ணீர் தண்ணீர் படத்தில் தண்ணீர் சிக்கலுக்கு தீர்வாக மக்கள் தூரத்தில் இருக்கும் நீராதாரத்தை கால்வாய் அமைத்து ஊருக்குள் கொண்டு வர பாதை அமைப்பார்கள்.

Our Daily Bread, காட்சியொன்றில் மாகாண அரசால் அந்த நிலம் ஏலம் விடப்படுகிறது. சில நூறு ஏக்கர் நிலத்தை சில ஆயிரம் டாலர்கள் என்ற அறிவிப்புடன் ஏலத்தை துவங்குகிறது அரசு. ஆனால் கூட்டாக மக்கள் செயல்படுகிறார்கள் குழுவில் ஒருவன் அதை 50 டாலர்களுக்கு கேட்கிறான், இன்னொருவன் 70, மற்றொருவன் 85 டாலர் என ஏலம் முடிகிறது. மொத்த நிலமும் மக்களுக்கு சொற்ப பணத்தில் சொந்தமாகிறது.

நிலத்தின் மதிப்பை உயர்த்துவதன் மூலம் யாரோ ஒருவர் நிலக்கிழார் ஆகிறார். பணமில்லாதவன் கூலியாகவே இருக்கிறான். சமுதாய சமநிலையினை கொண்டு வர மக்களின் ஒற்றுமை தான் உதவும் என்கிறார் இயக்குனர் ‘கிங் விதோர்’. தண்ணீர் தண்ணீர் படத்திலும் அரசாங்கம் மக்கள் கால்வாய் அமைக்க முயலும் கூட்டுழைப்பை சட்டத்தின் பெயரால் தடுப்பது சித்தரிக்கப் பட்டிருக்கும்.

கே.பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் படத்தில் போலீசால் தேடப்படும் வெள்ளச்சாமி என்ற ஒரு கதாபாத்திரம் மையமாக செயல்படும் . Our Daily Bread படத்திலும் போலீசால் தேடப் பட்டு வரும் ஒரு குற்றவாளியின் பொருளாதார பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

உண்மையை சொன்னால் அமெரிக்க ரொட்டியில் இந்திய மசாலா தடவி ருசியாக பரிமாறப்பட்டது தான் தேசியவிருது பெற்ற தண்ணீர் தண்ணீர். இப் படத்தில் “மெட்ராஸ் கொழாயில தண்ணி வரலயின்னா, பத்திரிக்கையில பக்கம் பக்கமா எழுதுவீங்க. எங்கூர் பிரச்சனைய எங்க எழுதுவீங்க” என ஒரு வசனம் வைத்திருப்பார்கள். 1934ல் வந்த ஒரு படைப்பு 1981ல் உருவான ஒரு படைப்பு இவ்விரண்டும் காலங்கள் கடந்து தற்போதும், தீராத ஒரு சிக்கலை உலர்ந்த மொழியில் பதப்படுத்தி வைத்திருப்பதை கவலையுடன் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆதியில் மனிதன் விவசாயம் துவங்கிய காலத்தை சற்றே பிரதிபலிக்கும் காட்சிகளும் இப்படத்தில் உண்டு. நாடோடியாக திரிந்த மனிதன் குழுவாக ஓரிடத்தில் விவசாயம் செய்தான். இப்படங்களின் மைய நூல் மக்களின் கூட்டுழைப்பின் நன்மை கொண்டு தைக்கப்பட்டிருக்கிறது. பகலில் விவசாயம் இரவில் பாட்டு கூத்து என மனிதனை கூட்டாக இயற்கையின் விரல் பிடித்து நடக்கச் சொல்கிறது ’Our Daily Bread’ & ’தண்ணீர் தண்ணீர்’

Our Daily Bread, வெளியாகத் தயாராக இருந்த காலத்தில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் இத் திரைப்படம் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்தலாம் என அஞ்சப்பட்டதால் சற்று தாமதமாகவே திரைக்கு வந்தது. அந்தளவில் நீர் மேலாண்மையில் கோட்டைவிடும் அரசு எதுவாக இருந்தாலும் அதற்கு தண்ணியில கண்டம் என்பது எல்லா காலத்துக்கும் பொருத்தம்.

சமீபத்தில் உணவின் முக்கியத்துவத்தை, நீரின் மகத்துவத்தை உணர்ந்து வரும் நாம் இப்போது தான் இயற்கை விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளோம்.