SNAKE & LADDERS AMAZON PRIME
ஓடிடி திரைப் பார்வை

SNAKE AND LADDERS | என்னங்க தொடரும் போட்டுட்டீங்க..!

புதையலைக் கண்டு எடுப்பது போல, தேவைப்படும் போதெல்லாம் பிணம் இருக்கும் இடத்தை தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

karthi Kg

வாலு பாய்ஸ் நான்குபேர் செய்த ஒரு தகிடுதித்தோம் அவர்களை எங்கு கொண்டு சென்றுவிடுகிறது என்பதே SNAKE & LADDERS தொடரின் ஒன்லைன்.

கில்பெர்ட் என்கிற கில்லி, சந்தோஷ், பாலா, இறை நால்வரும் ஒரே பள்ளியில் படித்துவருகிறார்கள். சீனியர் பசங்களையே ஓடவிடும் அளவுக்கு முரட்டு வாலு கிட்ஸாக வலம் வருகிறார்கள் இந்த கிட்ஸ். இந்த நான்கு சிறுவர்களுக்கும் உற்ற தோழியாய் இருக்கிறாள் ராகி என்கிற ராகிதா. திருடர் ஒருவர் ஒரு வீட்டிலிருந்து தப்பித்து இன்னொரு வீட்டில் வந்து ஒளிந்துகொள்கிறார் . அவர் கெட்ட நேரம் , அது கில்பெர்ட்டின் வீடாக இருந்துவிடுகிறது. அவரை பூட்டி வைக்கும் கில்பெர்ட் , வேறொரு பெரும் பிரச்னையில் சிக்கிக்கொள்கிறான். திருடரின் பையில் இருந்த பொருள் என்ன; தாத்தா பாட்டி வீட்டில் வசிக்கும் கில்பெர்ட் தன் தாய் தந்தையரை சந்தித்தானா; கில்பெர்ட்டும் அவன் நண்பர்களும் இணைந்து காவல்துறையினரிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை 9 எபிசோடுகளாக நீட்டி எடுத்திருக்கிறார்கள்.

பரத் முரளிதரன், கமலா அல்கெமிஸ், அசோக் வீரப்பன் இந்த கூட்டணி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் SNAKE & LADDERS. SNAKE & LADDERS என்ற பேரே இந்தத் தொடருக்கான USP (Unique Selling Point) யாக அமைந்துவிட்டது. இந்த கேம் தெரியாத நபர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள். இருந்தாலும் சொல்லிவிடுவோம். இந்தியாவில் "பரமபதம்" என்று அழைக்கப்படும் SNAKE & LADDERS விளையாட்டு மிகவும் பிரபலமானது. ஸ்மார்ட்ஃபோன்களின் காலத்திற்கு முன்பு டைம்பாஸுக்கு பலர் இதை வைத்து உட்காந்து இருப்பார்கள். இந்த விளையாட்டில், வீரர்கள் பகடை உருட்டி கிடைக்கும் எண்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்துவார்கள். ஏணி என்றால் ஸ்வைங் என மேலே செல்லலாம்; பாம்பு என்றால் வால் பகுதிக்கு வந்துவிடுவோம். விளையாட்டைத்தாண்டி வாழ்க்கைத் தத்துவமாகவும் இதை சிலர் கருதிக்கொள்வதுண்டு. ஆனால் எப்படி யோசித்தாலும் இந்த சீரிஸுக்கும், இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை.

நமக்கு பிரபலமான முகங்களாக இந்தத் தொடரில் வருவது கிட்டத்தட்ட கார்த்திக் சுப்புராஜின் (தொடரைத் தயாரித்திருப்பது காசுவின் STONE BENCH) செட் பிராப்பர்டி ஆர்டிஸ்ட்கள் தான். ரீக்கோவேக வேட்டை முத்துகுமார். சீரியஸா காமெடியா என சொல்லமுடியாத அளவுக்கு ஒரு வித்தியாசமான கேங்க்ஸ்டர் வேடம். இறையின் தந்தையா நந்தா. நந்தாவிற்கு இன்னுமே கொஞ்சம் கனமான வேடம் கொடுத்திருக்கலாம். இன்னொரு சிறுவனான சாண்டியின் தந்தையாக மனோஜ் பாரதிராஜா. வேட்டை முத்துகுமாரைப் போல நவீன் சந்திராவும் ஒரு டான். இவர்கள் போக சம்பத்தும் ஒரு டானாக வருகிறார். ஒரு மீனாட்சிபுரத்துக்கு எத்தனை மிராஸ்தார் என்பதாக இத்தனை ரவுடிகள் எதற்கு என்றே தெரியாத அளவுக்கு கதாபாத்திரங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கிறார்கள்.

தொடரின் பிரச்னை ஒரு குறிப்பிட்ட நபரின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. சினிமா தொடரில் அதீத அறத்தை எல்லாம் யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், ஒரு கொலைக்குப் பின் குற்றவுணர்ச்சி என்றாவது ஒன்று இருக்க வேண்டும். பாபநாசம் படத்தின் இறுதிக்காட்சியில் கமல் அந்த பையனின் பெற்றோரிடம் பேச சிரமப்படுவாரே , அப்படித்தான் எந்தவித தவறும் செய்யாத ஒருவரின் குற்றவுணர்வு என்பது இருக்கும் . பள்ளியில் சக மாணவன் சட்டையில் இங்க் அடிப்பது; சைக்கிள் வீலில் காற்றை பிடுங்குவது; ஆசிரியர் பழிக்குப் பழி வாங்குகிறேன் பெயரில் ஏதாவது கிறுக்குத்தனம் செய்வது என பால்ய காலத்தில் எல்லோருமே அவரவர் சக்திக்கு ஏதோவொரு தவறு செய்திருப்போம். ஆனால், ஒரு மரணத்தை இவ்வளவு கேசுவலாக நாலு சிறுவர்கள் டீல் செய்வதாக இந்தத் தொடரை எடுத்திருப்பது அபத்தம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. புதையலைக் கண்டு எடுப்பது போல, தேவைப்படும் போதெல்லாம் பிணம் இருக்கும் இடத்தை தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிறுவர்கள் தான் புரிதல் இல்லாமல் இதை மறைக்கிறார்கள் என்றால், இவர்களுக்கு உற்ற துணையாக மனோஜும் இணைந்துகொள்கிறார். ஒருவழியாய் முடித்துவிடுவார்கள் என நாம் ஒன்பது எபிசோடையும் பார்த்து முடிக்க ஆயுத்தமானால், அடுத்த சீசனுக்கு லீடு வைத்து கொக்காணி காட்டியிருக்கிறது படக்குழு. பார்வையாளர்கள் உயிர்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா.

சிறுவர்களை வைத்து சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. ஆனால், அதில் நிச்சயம் SNAKE & LADDERS இடம்பெறாது.