Martin Short, Selena Gomez , Steve martin Hotstar
ஓடிடி திரைப் பார்வை

Only Murders in The Building Review | சிரிக்க வச்சு சிரிக்க வச்சு கொல்றாங்களே..!

சிரித்துக்கொண்டே த்ரில்லர் கதை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக இந்த சீரிஸை பார்க்கலாம்.

karthi Kg

சார்லஸின் ஸ்டன்ட் டபுள் சாஸ் படாக்கியை கொன்றவர்கள் யார் என்பதை துப்பு துலக்கி ஆராய்வதே Only Murders in The Building தொடரின் நான்காவது சீசனின் ஒன்லைன்.

ஆலிவர் (மார்ட்டின் ஷார்ட்) , சார்லஸ் (ஸ்டீவ் மார்ட்டின்) , மேபல் (செலினா கோமஸ்) மூவரும் பாட்காஸ்ட் புகழ் வெளிச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் . மூன்று சீசன்களிலும் கொலையாளியைக் கண்டுபிடித்ததால் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் உருவாகிவிடுகிறது. புக்கோ, நாவலோ ஹிட் ஆனால், படமாக்குவது தானே ஹாலிவுட் பாணி. அதன் வரிசையில் இவர்கள் மூவரின் பாட்காஸ்ட் வாழ்க்கையை திரைப்படமாக்க முடிவு செய்கிறது பாராமௌண்ட் பிக்சர்ஸ். ஆலிவருக்கு எப்படியாவது அங்கே சென்றுவிட்டால் காதலி லோரெட்டாவை (மெரில் ஸ்டிரீப்) பார்த்துவிட முடியும் என்பதால், மற்ற இருவரையும் விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு செல்கிறார். இதற்கு இடையே, சார்லஸின் ஸ்டன்ட் டபுளான சாஸ் படாக்கி கொல்லப்பட்ட விஷயம் வெளிச்சத்து வருகிறது. ஸ்டன்ட் டபுள் கொல்லப்பட்டிருக்கிறார் என்றால் டார்கெட் வேறு யாரோ என்பதை உறுதி செய்கிறது மூவர் டீம். யார் கொலை செய்திருப்பார்கள் என்னும் தேடுதல் வேட்டையில் அடுத்தடுத்து பல ட்விஸ்ட்கள் வந்து விழுந்துகொண்டேயிருக்கின்றன. எதிர் அப்பார்ட்மென்ட்டில் இருப்பவர்கள் தொடங்கி பாராமௌண்ட் பிக்சர்ஸில் இருப்பவர்கள் வரை எல்லோரையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவருகிறார்கள். இறுதியில் யார் அந்த கொலையாளி என்பது தான் நான்காவது சீசனின் மீதிக்கதை.

கொலை, துப்பாக்கி, மர்டர் என்றெல்லாம் பீதியைக் கிளப்பினாலும் இந்த சீரிஸ் ஒரு காமெடி சீரிஸ் என்பதால் காமெடிக்கும் ஒரு எபிசோடிலும் கூட பஞ்சமில்லை. 79 வயதான ஸ்டீவ் மார்ட்டின் இதிலும் கிடைத்த கேப்பில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். அதே சமயம், சாஸ் படாக்கிக்கும், சார்லஸுக்குமான பிணைப்பு என்ன என்பதை ஃபிளாஷ்பேக் காட்சிகள் மூலம் விளக்குகிறார். எமோசனலான காட்சிகளாக இருந்தாலும், அதிலும் ஆங்காங்கே காமெடி கதகளி ஆடியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எதிர் அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்களை வேவு பார்க்கப்போகிறோம் என இவர்கள் செய்வதையெல்லாம் நம்மூர் சினிமாக்களில் கூட ரீமேக் செய்யலாம்,.

இவர்களின் ரீல் கதாபாத்திரங்களுடன் இவர்கள் பேசிக்கொள்ளும் காட்சிகள் நல்லதொரு காமெடி பேக்கேஜ். முந்தைய தொடரை விடவும் இதில் நிறைய கேமியோக்கள். ஆனாலும் குறையொன்றும் லெவல் தான். ஏழாவது எபிசோடு வரை சர்ப்ரைஸை மெயின்டெய்ன் செய்ததில் வெற்றி பெற்றிருக்கிறது கதைக்குழு. மேபலாக மீண்டும் சிறப்பானதொரு பெர்பாமன்ஸை கொடுத்திருக்கிறார் செலினா கோம்ஸ். இந்த சீசனில் மெரில் ஸ்டிரீப்பிற்கு பெரிதாக வேலையில்லை.

டைட்டில் கார்டு, மூன்று நடிகர்களுக்குமான காஸ்டியூம், சித்தார்த்த கோஷ்லாவின் இசை என எல்லாமே பக்கா.

சிரித்துக்கொண்டே த்ரில்லர் கதை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக இந்த சீரிஸை பார்க்கலாம். முதல் மூன்று சீசன்களும் ஜாலியான த்ரில்லர் வகைமை தான்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று ஹாட்ஸ்டாரில் இதன் எபிசோடுகள் வெளியாகும்.