உலகம் முழுக்க பாப்புலரான MasterChef சீரிஸை தமிழுக்கும் இறக்குமதி செய்திருந்தார்கள். MasterChef India - தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் சன் டிவியில் வெளியானது. தற்போது அதன் அடுத்த சீசனை சோனி லைவில் வெளியிடவிருக்கிறார்கள்.
என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு சிட்டகை அளவுக்காவது காமெடி கட்டாயம் இருக்க வேண்டும் என முடிவு செய்து தொலைக்காட்சி இயக்குநர்கள் முடிவு செய்திருந்த காலம் அது. அப்படியிருக்கையில் சமையலை மட்டும் சும்மா விட்டுவிடுவார்கள் என்ன. கொஞ்சம் சமையல் நிறைய காமெடி என கலந்து கட்டி நிகழ்ச்சிகளைத் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உலகம் முழுக்க ஹிட் அடித்த MasterChef சீரிஸை தமிழுக்குக் கொண்டுவந்திருந்தார்கள். வழக்கம் போல காமெடியாக இருக்கும் என நினைத்தால், ரொம்பவே சீரியஸாக சென்றது MasterChef India தொடர்.
'சமையல் ஒரு சீரியஸ் பிசினஸ்’ என்ற அவர்களின் டேக் லைனுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று அந்நியப்பட்டு நின்றாலும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. Chef ஆகும் கனவோடு இருக்கும் எளிய பின்புலத்தைக் கொண்டவர்களை இதில் பங்கேற்கச் செய்தது , இந்த நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
இந்நிலையில் இதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இடம்பெறமாட்டார் என்றே தெரிகிறது. இப்போது வந்த டிரெய்லரில் எங்கேயும் அவர் முகத்தைக் காணவில்லை. முதல் சீசன் டிவியில் ஒளிபரப்பான நிலையில், அடுத்த சீசன் நேரடியாக ஓ.டி.டி-யில் (Sony LIV) ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழுடன் சேர்த்து தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இதில் நடுவர்களாக செஃப் ராகேஷ் ரகுநாதன், செஃப் கௌஷிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரீத்தி, ஆகாஷ், சங்கீதா, கவிதா, நந்தா உள்ளிட்ட சாமானிய மக்கள் பலர் போட்டியாளர்களாகப் பங்குபெறுகின்றனர். இந்த இரண்டாவது சீசன் வரும் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.