பார்த்திபன் இயக்கிய ‘புதியபாதை’ திரைப்படம், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க திருப்புமுனை முன்நகர்வைக் கொடுத்தது. சராசரி குடிகார இளைஞன் ஒரு பெண்ணின் காதலால் திருந்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் படியான கதையம்சம் கொண்ட அப்படம் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்திய சினிமாவில் கமல்ஹாசனுக்கு அடுத்து அதிகப்படியான பரிட்சார்த்த முயற்சிகளை செய்தவர் பார்த்திபன். அவரது ‘ஹவுஸ் புல்’ திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தோடு அந்த படைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் அது அசாத்திய துணிச்சல் தான். சிலவருடங்களுக்கு முன் வெளியான ‘திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தின் மூலம் கதையே இல்லாமல் ஒரு கதையை திரையில் எழுத முடியும் என நிரூபித்தார் பார்த்திபன்.
கமல்ஹாசனை தனது ஆதர்சம் என அடிக்கடி கூறும் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் கமல்ஹாசன் “பார்த்திபனின் ‘புதியபாதை’யில் நடிக்க முதலில் என்னைத் தான் கேட்டார்கள். ஆனால் அப்போது பிஸியாக இருந்தேன். தேதி இல்லாததால், என்னால் ‘புதியபாதை’யில் நடிக்க முடியவில்லை. இருப்பினும் அதற்காக நான் வருந்தவில்லை. காரணம் அதில் நான் நடித்திருந்தால் தமிழ் சினிமாவிற்கு பார்த்திபன் போன்ற ஒரு அருமையான நடிகர் கிடைக்காமல் போயிருக்கலாம்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் “‘ஒத்த செருப்பு’ படத்தை பாராட்டி பேசியிருக்கிறார். இதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பார்த்திபன் மேலும் ஒரு தகவலை ட்வீட் செய்துள்ளார்.
அதில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சிக்காக தான் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருப்பதாக கூறியுள்ளார். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸின் ஹர்கின் செரிடாஸ் திரையரங்கில் ‘‘ஒத்த செருப்பு’ திரையிடல் நடைபெற இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை சந்திக்கலாம் என்றும் அவர் தன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
‘ஒத்த செருப்பு’ திரைப்படம் 'கோல்டன் குளோப்' விருது பெற வாழ்த்துவோம்…