சினிமா

ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட வருகை தரும் வேற்றுலகவாசிகள்

webteam

வேற்றுலகவாசிகளின் வருகையை மையமாக கொண்டு டெனிஸ் விலனோவா இயக்கியிருக்கும் அரைவல் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

வேற்றுலகவாசிகளின் வருகையை இதுவரை இல்லாத வகையிலான மாறுபட்ட கோணத்தில் வழங்கியிருக்கும் திரைப்படும் அரைவல் (Arrival). இந்தத் திரைப்படம், 8 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, உள்ளிட்ட பிரிவுகள் இவற்றில் அடங்கும். ஒரு பெண் மொழியாக்க நிபுணர், வேற்றுலகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும்போது நிகழும் சம்பவங்களைக் கொண்டு உணர்வுப்பூர்வமாக நகர்கிறது திரைக்கதை.

உலகமெங்கும் 12 இடங்களில் வேற்றுலகவாசிகளின் பறக்கும் தட்டுகள் ஒரே நேரத்தில் வருவதால், ஏற்படும் குழப்பமே கதையின் மையம். மிகவும் மாறுபட்ட பறக்கும் தட்டுகளையும், அதில் வந்த வேற்றுலகவாசிகளின் மொழியையும் புரிந்து கொள்ள முடியாமல் அமெரிக்க அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கும்போது, கதாநாயகியான லூயி பேங்ஸ் உதவிக்கு அழைக்கப்படுகிறார். மொழியாக்க நிபுணரான லூயி பேங்க்ஸின் உள்ளுணர்வில் தோன்றும் காட்சிகளும், பறக்கும் தட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் கதையைக் கொண்டு செல்கின்றன.

வேற்றுலகவாசிகளின் புதுமையான எழுத்துமொழியை, சீனா உள்ளிட்ட நாடுகள் தவறாகப் புரிந்து கொண்டு பறக்கும் தட்டுகளைத் தாக்குவதற்கு முயற்சி செய்கின்றன. இதனால் பெருங்குழப்பம் ஏற்படுகிறது. வேற்றுலகவாசிகள் என்ன சொல்வதற்கு முயற்சி செய்தார்கள் என்பது கதாநாயகி லூயிக்கு மட்டுமே புரிகிறது. பேரழிவைத் தடுப்பதற்கு அவர் என்ன செய்கிறார் என்பதுதான் முடிவு.

வேற்றுலகவாசிகளின் மொழியை சீனா புரிந்து கொள்ளாமல் பறக்கும் தட்டுகளைத் தாக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள், திட்டமிட்டே அமைக்கப்பட்டதா அல்லது தற்செயலாகக் கதைப் போக்கில் நிகழ்ந்ததா என்பது இயக்குனருக்குத்தான் தெரியும்.

வேற்றுலகவாசிகள் தொடர்பாக கதைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் காலம் குறித்த பதிவுகள் இந்தத் திரைப்படத்திலும் உண்டு. இருப்பினும், காலத்தை ஒரு பரிசாக வழங்க முடியும் எனக் குறிப்பிட்டதன் மூலம் பிற வேற்றுலக வாசிகளின் கதைகளில் இருந்து அரைவல் திரைப்படம் மாறுபடுகிறது.

ஈர்ப்பு விசையின் வேறொரு பரிமாணம், பறக்கும் தட்டின் வடிவமைப்பு, வேற்றுலகவாசிகளின் மொழி ஆகியவை அறிவியல் புனைவுக்கான மேம்பட்ட தகுதியை வழங்குகின்றன. பட்ஜெட்டை விட நான்கு மடங்கு வசூலைக் குவித்திருக்கும் இந்தத் திரைப்படம், 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் பல விருதுகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் லா லா லேண்ட் திரைப்படத்தை முந்துமா என்பது கேள்விக்குறிதான்.