சினிமா

துணிவு, வாரிசு கட் அவுட்களை அகற்றுங்கள்.. காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

துணிவு, வாரிசு கட் அவுட்களை அகற்றுங்கள்.. காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

PT

தியேட்டர்களில் இருந்து 'துணிவு' மற்றும் 'வாரிசு' பட கட் அவுட்களை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொங்கல் திருநாளையொட்டி நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ படமும், நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் இன்று முதல் காஞ்சிபுரம் மடம் தெருவிலுள்ள பிரபல திரையரங்கான பாபு சினிமாஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விரு திரைப்படங்களும் இன்று சிறப்புக் காட்சிகளுடன் திரையிடப்பட்ட நிலையில், இதனை ஒட்டி திரையரங்கம் நுழைவு வாயிலிருந்து திரையரங்கு வளாகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் என அதிக அளவில் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே திரையரங்குகளில் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைக்க கூடாது என தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அளித்த நிலையிலும், அதனை பின்பற்றாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி இன்று பாபு சினிமாஸ் திரையரங்கில் ஆய்வு மேற்கொண்டப்போது, அங்கு பாதுகாப்பு அற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்களை உடனடியாக அகற்றிட வேண்டும் என திரையரங்கு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு இது குறித்தான தகவல் தெரிவிக்கப்பட்டு, திரையரங்கு நிர்வாகம் சார்பில் பணியாளர்களுடன் தனது ஊழியர்கள் உதவியுடன் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்களை அகற்றினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் இருக்க திரையரங்க வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இத்திரையரங்கில் நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்காக வைக்கப்பட்டிருந்த 30 அடி உயர கட் அவுட்டினை பணியாளர்களும், திரையரங்க ஊழியர்களும் அகற்றிய போது கட் அவுட் திடீரென சரிந்து கீழே விழுந்ததால் அங்கிருந்த ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக கட் அவுட் சரிந்து கீழே விழுந்ததில், கட் அவுட்டில் இருந்த கால் பகுதி மடங்கி சேதமடைந்து இருந்தாலும் கூட, நல்ல வேளையாக பணியாளர்கள், திரையரங்கு ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள அனைக்து பிளக்ஸ் பேனர்களும், கட் அவுட்களும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் விதிகளை மீறி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்க்கு காவல் நிலையம் எதிரே பேனர் வைத்த அவர்களது ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், அதே போல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைத்த ரசிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது