சினிமா

’சூரரைப் போற்று’ - தியேட்டர் வெளியீட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பும் ஆதரவும்

’சூரரைப் போற்று’ - தியேட்டர் வெளியீட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பும் ஆதரவும்

sharpana

'சூரரைப் போற்று' திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ தீபாவளியையொட்டி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. இந்தியா முழுக்கவே ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினரும் ’சூரரைப் போற்று’ படத்தை பாராட்டினார்கள். அதேசமயம், தியேட்டரில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டார் என்று அப்போதே திரையரங்க உரிமையாளர்கள் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் ’சூரரைப் போற்று’ திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்காக, தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில், திரையரங்க உரிமையாளர்கள் ஒரு தரப்பினர் 'சூரரைப் போற்று' திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக 'சூரரைப் போற்று' திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.