"கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும்" என்று தனியார் வாடகை முறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்ல 30 ரூபாய் முதல் 475 ரூபாய் வரை இருந்த அரசு ரயில் கட்டணத்தை, தற்போது தனியாருக்கு வாடகை விடப்பட்டதால், 3000 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இது கோடைகாலத்தில் இன்னும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ரயில்வே சங்கங்களும் எதிர்கட்சிகளும் அறிக்கை விட்டிருந்தனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.