சூர்யா - ஆர்ஜே பாலாஜி web
சினிமா

’இந்த காம்போவ யாரும் எதிர்ப்பார்க்கல..’ - சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி!

Rishan Vengai

பாகுபலி, கே.ஜி.எஃப், பதான் என இந்திய சினிமாவில் மற்ற திரையுலகினர் பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டு அந்தப் படங்கள் தமிழ்நாட்டிலும் சக்கப்போடு போட்ட நிலையில், 'தமிழ்சினிமா என்ன தான் பா பண்ணிட்டு இருக்கிங்க' என்ற குரல் பெரிதாக எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் “கங்குவா” திரைப்படம் இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பீரியட் திரைப்படமாக உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. இது சூர்யாவின் 42வது திரைப்படமாகும்.

Kanguva Poster

அடுத்தடுத்த படங்களாக 43வது படமாக சுதா கொங்கரா உடனும், 44வது படமாக கார்த்திக் சுப்புராஜ் உடன் கைக்கோர்ப்பு என கமிட்டாகியிருக்கும் நடிகர் சூர்யாவின் 45வது படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜியுடன் இணையும் சூர்யா..

நடிகர் சூர்யாவின் 45வது படம் குறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சூர்யா நடிக்கும் 45வது படமானது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகராக மட்டும் அறியப்பட்ட ஆர். ஜே. பாலாஜி, தற்போது சூர்யா போன்ற மிகப்பெரிய நடிகரை இயக்கவுள்ளது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, எங்கல்ஸ் ராமசாமி உடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. அதேபோல், என்.ஜே.சரவணன் உடன் அவர் இணைந்து இயக்கிய வீட்ல விஷேசங்க திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனிடையே மூக்குத்தி அம்மன் 2 படத்தை நயன் தாராவை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்தப் படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில் தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் இரண்டு படங்களில் மற்றொரு இயக்குநருடன் இணைந்து பணியாற்றிய நிலையில் தற்போது தனியாக சூர்யா போன்ற மாஸ் ஹீரோ உடன் படம் இயக்கவுள்ளார் என்பது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் இருக்கும் அரிவாள்களுக்க் மத்தியில் குதிரை பாய்ந்து செல்வதுபோல் இருக்கும் படத்தின் போஸ்டரும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.