இந்த வருடத்தில் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘ ஓ மை கடவுளே’ திரைப்படம் டொரோண்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியான ஓ மை கடவுளே காதல் படங்களில் புதிய கதைக்களத்தோடு வெளியானதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் இயக்க திட்டமிட்டுள்ளார், இப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
சமீபத்தில்தான், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு இப்படத்தை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தகது. சர்வதேச திரைப்பட விழாவில் ஏற்கனவே, தென்னிந்தியப் படங்களான ஜெர்சி, டிரான்ஸ், கைதி ஆகிய மூன்று படங்கள் மட்டும் தேர்வாகியிருந்த பட்டியலில் தற்போது ’ஓ மை கடவுளே’ படமும் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ”முதல் படம் முதல் சர்வதேச அங்கீகாரம். மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்” என்று பதிவிட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார், இப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள, இப்படத்தில் கடவுளாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.