கமல்ஹாசன், சீமான் pt web
சினிமா

“இந்தியன் 1 வந்தது.. ஊழல் லஞ்சம் ஒழிந்துவிட்டதா?” - இந்தியன் 2 படம் பார்த்த பின் சீமான் பேட்டி!

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியான நிலையில் சத்யம் திரையரங்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல பிரபலங்கள், ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

“எப்போதும் கமல் படங்களை முதல் காட்சியில் நாங்கள் சிலர் பார்ப்போம். அப்படியே இன்றும் பார்த்துள்ளோம். இப்படத்தில் சில நல்ல படைப்புகள் வந்துள்ளன. நாம் எப்போதும், நாம் சந்திக்கும் பிரச்னைகளை அப்படியே கடந்து போய்விடுகிறோம். பின்னாளில் பார்த்தால், அதுதான் நாட்டின் முக்கிய பிரச்னையாகவே இருக்கும்.

சீமான்

இப்படத்தில், கமலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. நமக்குள் இருக்கும் பிரச்னையை கேட்க யாராவது வருவார்கள் என்ற நிலை இன்னும் இருக்கிறது. அப்படிதான் மக்கள் பார்க்கிறார்கள். நம்முடைய நிலம், நீர் போன்றவற்றில் பாதிப்பு இருந்தால் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய வீட்டை சரி செய்ய வேண்டும் என்ற இந்தியன் 2 திரைப்படம் வலியுறுத்துகிறது. 

ஊழல், லஞ்சத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இன்று கோவிலில் சாமி கும்பிடுவது முதல் மருத்துவம் வரை அனைத்து இடத்திலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. லஞ்சம் தொடர்பாக எத்தனை திரைப்படம் வந்தாலும் மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டியது அவசியம். மக்கள் ஊழல் மையமாக மாறிவிடக் கூடாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

தொடர்ந்து, சீமான் மீது அமைச்சர் கீதா ஜீவன் வைத்த கடும் விமர்சனம் குறித்து சீமானிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அவருக்கு பின்னர் பதில் அளிக்கிறேன். அதற்கான மேடை இருக்கிறது. அவர் இன்று தெரிவித்த கருத்துக்கு பின்பு பேசுகிறேன்” என பதில் அளித்து சென்றார். 

முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியை சீமான் நேற்று கடுமையான மற்றும் சர்ச்சைக்குள்ளான வகையில் விமர்சித்திருந்தார். அதற்கு எதிரொலியாக அமைச்சர் கீதா ஜீவன் இன்று “சீமான் அவர் மனநிலையை சோதிக்க வேண்டும். நாக்கை அடக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக அவர் தெரிகின்றார்” என்று கூறியிருந்தார்.