சினிமா

ரஜினியின் ‘காலா’விற்கு எதிராக நிஜக் ‘காலா’வின் மகன் நோட்டீஸ்

webteam

ரஜினியின்‘காலா’திரைப்படம் மும்பை வாழ் தமிழர் திரவியம் நாடார் வாழ்கையை தவறாக சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது.  

1957 ல் தூத்துக்குடியில் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை இருந்தபோது தூத்துக்குடி மாவட்ட கிராமத்திலிருந்து பம்பாய் வந்தவர் எஸ்.திரவியம் நாடார். இவர் தாராவி, சியான், செம்பூர் என பம்பாயின் பல்வேறு பகுதிகளில் பல வேலைகள் பார்த்து முன்னேறியதுடன், அங்குள்ள மக்களுக்கு சாதி, மத, இன பாகுபாடின்றி உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருந்தார். 

மும்பை தமிழர்கள் அவரை "காட் ஃபாதராக" பார்த்தனர். அரசியல்வாதிகள், ரவுடிகள், காவல்துறையினர், விசாரானை அமைப்புகள் என பல்வேறு தரப்புக்களால் கொடுமைப்படுத்தப்பட்ட மும்பை தமிழ் மக்களை திரவியம் நாடாரின் செயல்பாடுகள்தான் காப்பாற்றின. திரவியம் நாடார் வெல்லம் மற்றும் சர்க்கரை விற்பனையில் பெரிய முகவராக திகழ்ந்தார். அவரது நற்பெயர் காரணமாக வியாபரத்தில் கொடிகட்டி பறந்தார். குட்வாலா சேட், காலா சேட் என அனைவராலும் அவர் அழைக்கப்பட்டார். தமிழர்களால் அண்ணாச்சி என அழைக்கப்பட்டார். அந்தப் புகழ்மிக்க மனிதர் 2003ல் மரணமடைந்தார். வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் தேவர் ஆகியோரும் திரவியம் நாடாரால் ஈர்க்கப்பட்டு, அவரை பல முறை சந்தித்துள்ளனர்.

திரவியம் நாடார் சட்டத்திற்கு புறம்பான எவ்வித செயல்களிலும் ஈடுபட்டதில்லை. தான் சரியாக படிக்காவிட்டாலும் கூட தாராவியில் காமராஜர் நினைவு உயர்நிலை பள்ளியை தொடங்கியனார். அவரது மகன் ஜவஹர் நாடார் மும்பையில் நன்கு அறியப்பட்ட ஒரு பத்திரிகையாளர். தற்போது ரஞ்சித், தனுஷ் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள ‘காலா கரிகாலன்’ படம் தனது தந்தை திரவியம் நாடாரின் பெர்சனாலிட்டிக்கு அவதூறு பரப்பும் வகையில் உள்ளது. திராவிடர்கள், பின் தங்கியவர்களின் உரிமைகளை பறிக்கும் சில அரசியல் கட்சிகள் குறித்து படத்தில் தவறாக உள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து இதுபோன்ற தவறுகளை செய்து வரும் உங்கள் செயலுக்கு ரூ. 101 கோடி மான நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். திரவியம் நாடார் குறித்த உங்களின் படைப்பு பற்றி எழுத்துப்பூர்வமான மன்னிப்பை 36 மணி நேரத்தில் ஜவஹர் நாடாரிடம் கேட்க வேண்டும் என திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் நாடார் சார்பாக மும்பை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்  சையத் இஜாஸ் அப்பாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ‘காலா’ படத்திற்கு மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளது.