பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு யாராலும் தடை விதிக்கமுடியாது என அப்படத்தின் கதை ஆசிரியர் சஞ்சய் ராட் தெரிவித்துள்ளார்
தனது வாழ்க்கையை கார்ட்டூனிஸ்டாக தொடங்கிய பால் தாக்கரே, 1966 ஆம் ஆண்டு சிவசேனா என்ற அமைப்பை தொடங்கினார். ஆரம்பத்தில் அமைப்பாகவே செயல்பட்டு வந்த சிவசேனா பின்னர் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில் இயக்குநர் அபிஜித் இயக்கத்தில் பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் தேசிய விருது பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பால் தாக்கரேவாக நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. மும்பையில் நடைபெற்ற இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் திரை நட்சத்திரங்கள், பால் தாக்கரேவின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அரசியல் பிரமுகரும், பால் தாக்கரேவின் கதையை எழுதியவருமான சஞ்சய் ராவத், ''பால் தாக்கரே வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே திரைப்படமாக கொடுத்துள்ளோம். அவர் அரசியலையும், மக்களையும் கையாண்ட விதத்தை அப்படியே பதிவு செய்துள்ளோம். நாங்கள் எதையும் கற்பனையாக பதிவு செய்யவில்லை. படத்தின் இயக்குநர் உண்மையை மட்டுமே பதிவு செய்துள்ளார். என்று தெரிவித்தார்.
மேலும் '' இந்தப்படத்துக்கு யாராலும் தடை விதிக்கமுடியாது. இது தாக்கரேவின் வாழ்க்கைப்படம். இதனை எப்படி ஒருவரால் தடை விதிக்க முடியும்? பால் தாக்கரே வாழ்க்கையின் நல்லது கெட்டது பற்றி முடிவு செய்ய தணிக்கைக்குழுவால் எப்படி முடியும்? தணிக்கைக்குழு நேரம் எடுத்துக்கொண்டாலும் அவர்கள் நிச்சயம் பால் தாக்கரேவின் வாழ்க்கை புரியும்'' என்று தெரிவித்தார்.
பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ட்ரெய்லரில் இந்து - முஸ்லீம் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் குறித்தும் வசனங்கள் வருவதால் இது மத ரீதியில் மன வருத்தத்தை தருவதாகவும், அதனால் இந்தப்படத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஜனவரி 25ம் தேதி இந்தி மற்றும் மராத்தி மொழியில் வெளியாக உள்ளது.
டிரெய்லர்: