சினிமா

வாக்களிக்க முடியாமல் திரும்பிய கொல்லங்குடி கருப்பாயி

webteam

நடிகை கொல்லங்குடி கருப்பாயிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் உறுப்பினர் அட்டை பெற்றுத் தந்தும் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என அவர் மனவருத்தமடைந்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்த நா‌டக கலைஞர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தருமபுரியைச் சேர்ந்த, சிங்காரவேலர் உள்ளிட்ட 3 பேர் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்தனர். ஆனால், தபால் வாக்கில்‌ மட்டுமே அவர்களால் வாக்களிக்க முடியும் எனத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், நாடக கலைஞர்கள் அதிருப்தியடைந்தனர். தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதேபோல், ஆண்பாவம், கோபாலா கோபாலா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை கொல்லங்குடி கருப்பாயிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் உறுப்பினர் அட்டை பெற்றுத் தந்தும் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என அவர் மனவருத்தமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இரு தரப்பிலிருந்தும் வாக்களிக்க அழைப்பு வந்தது. என்னை வாழவைக்கும் திரைத்துறைக்காக வாக்களிக்க வந்தேன். குடுமியை கையில் பிடித்துக்கொண்டு முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்று ஓடோடி வந்தேன். ஓட்டு உரிமை இல்லை எனத் தெரிவித்துவிட்டனர். தாங்கமுடியாத மனவருத்தம் அடைந்துள்ளேன். ஒருமுறையாவது வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.