சினிமா

மலேசியாவில் தர்பார் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை..!

மலேசியாவில் தர்பார் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை..!

webteam

உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் மலேசியாவில் நாளை வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்கக்கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ பட தயாரிப்பு பணிக்காக லைகா நிறுவனம் வாங்கிய 12 கோடி ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தராமல், தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையோ அல்லது வங்கி உத்தரவாதத்தையோ லைகா நிறுவனம் டெபாசிட் செய்யும் வரை, தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை லைகா நிறுவனம் டெபாசிட்செய்தது. இதுகுறித்த தகவலை லைகா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் தர்பார் படம் மலேசியாவில் நாளை வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.